வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (04/06/2018)

கடைசி தொடர்பு:07:56 (04/06/2018)

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது..!

பரபரப்பான அரசியல் சூழலில், புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

பட்ஜெட்

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி கூடியது. அன்றைய தினம், அரசின் மூன்று மாத செலவீனங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி, பேரவையில் தாக்கல் செய்தார். அதையடுத்து, கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்தார். இந்நிலையில், 2018-19 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல்செய்யவும், அது தொடர்பான விவாதங்கள் மற்றும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக, இன்று மீண்டும் புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல, இன்றைய தினம் போலி ஏடிஎம் கார்டு மோசடி, அறிவித்த மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைப் பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை

மேலும், இன்றைய பேரவைக் கூட்டம் முடிந்தவுடன், அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க-வைச் சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூன்று பேரையும் மத்திய அரசு எம்.எல்.ஏ-க்களாக நியமித்த விவகாரம், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவைக்குள் அனுமதிக்காத சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நியமன எம்.எல்.ஏ-க்கள் தலைமையில் பா.ஜ.க-வினர் கறுப்புகொடி ஏந்தி தடையை மீறி சட்டப்பேரவையை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், சட்டப்பேரவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க