மனைவிகளை ஜாமீனில் எடுக்க கணவர்கள் எடுத்த விபரீத முடிவு!

சிறையில் இருக்கும் மனைவிகளை ஜாமீனில் எடுப்பதற்காக, திருடிய இரு கணவன்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுக்கா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரியும் அனந்தகுமார் மற்றும் கிளியனூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் அவரது மனைவி சாந்தி இருவரும் வஹாப் நகரில் வசித்துவருகின்றனர். இரு தினங்களுக்கு முன், காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு இருவரும் வேலைக்குச் சென்றிருக்கின்றனர். பணி முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, உள்ளே இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வந்தது திண்டிவனம் போலீஸ்.

நேற்று முன்தினம், திண்டிவனம் நேரு வீதியில் வழக்கமான வாகனச் சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணைசெய்தனர். அதில், வெங்கடேசன் என்பவர் திருப்பூர், ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும் ஜீவா, சந்திரன் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், தலைமையாசிரியரின் வீட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். மேலும், இவர்கள் இருவர் மீதும் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, பவானி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. செயின் பறிப்பு வழக்கில் இவர்கள் இருவரின் மனைவிகளும் விக்கிரவாண்டி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமீனில் விடுதலை செய்வதற்காகவே ஆசிரியர் வீட்டில் நகைகளைத் திருடியதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!