தஞ்சமடையச் சென்றபோது 48 அகதிகளுக்கு நடந்த சோகம்! | 48 migrants killed in boat capsize off Tunisian coast

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (04/06/2018)

கடைசி தொடர்பு:12:05 (04/06/2018)

தஞ்சமடையச் சென்றபோது 48 அகதிகளுக்கு நடந்த சோகம்!

துனிஷியா கடல் பகுதியில், சுமார் 180 அகதிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பியா சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

படகு

லிபியா, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரின் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் செல்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1.5 லட்சம் மக்கள் அகதிகளாக ஐரோப்பியா நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் படகுகள் வழியாகக் கடல் கடந்து மற்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். சிறிய படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகிவருகிறது. 

இதேபோல, நேற்று சுமார் 180 பயணிகளுடன் வடக்கு ஆப்பிரிக்காவின் துனிஷியா கடல் பகுதியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 48 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துப் பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றுவருவதாகவும், இதுவரை 60 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் துனிஷியா பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீட்புப் படையினருடன் ராணுவ விமானங்கள், கடற்படை வீரர்கள் இணைந்து செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.