வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (04/06/2018)

கடைசி தொடர்பு:16:27 (04/06/2018)

குட்டியைப் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு உயிரைவிட்ட தாய் யானை!

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே நேற்று இறந்த, சுமார் 30 வயது பெண் யானையின் முதற்கட்ட உடற்கூறாய்வில், அதன் மேல் தாடை முழுவதும் புண் படர்ந்திருந்ததும், கீழ்த் தாடை உடைந்து, நாக்கு துண்டாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே, நேற்று இறந்த, சுமார் 30 வயதுள்ள பெண் யானையின் முதற்கட்ட உடற்கூறாய்வில், அதன் மேல் தாடை முழுவதும் புண் படர்ந்திருந்ததும், கீழ்த்தாடை உடைந்து, நாக்கு துண்டாகியிருந்ததும் தெரியவந்துள்ளது.  

நீலகிரி மாவட்டம், பந்தலுாரை அடுத்த படச்சேரி பகுதியில், கடந்த மூன்று நாள்களாக 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல்நலம் சரியில்லாமல் குடியிருப்புப் பகுதி அருகே சுற்றித்திரிந்துள்ளது. வனக் காவலர்கள், அதன் உடல் நிலையையும் மனிதர்கள் அதன் அருகில் செல்லாமலும் கண்காணித்துக்கொண்டனர்.

யானை

இந்த யானை, தன் குட்டியுடன் சேரம்பாடி பகுதியில் சுற்றித்திரிந்ததாகவும், கடந்த வாரம் சேரம்பாடி பகுதியில் நம்பர் 2 என்ற இடத்தில் மூதாட்டி ஒருவரைத் தாக்கிக் காென்றதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்த யானை, உயிர் பிழைக்க மாட்டோம் எனத் தெரிந்துதான், குட்டியை வேறு யானைக் கூட்டத்துடன் சேர்த்துவிட்டு, இப்பகுதியில் தனியாகத் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உணவு, தண்ணீருக்காகக் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தபோது, சோர்வு காரணமாக ஒரு வீட்டின் சுற்றுச்சுவர்மீது விழுந்து, எழ முடியாமல் தவித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைபடி, பொதுமக்களுக்குத் தொந்தரவு இல்லாமல் சிகிச்சையளிக்க முடிவுசெய்த கால்நடை மருத்துவர் பிரபு, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த யானையை கிரேன் உதவியுடன் நிற்கவைத்து, அருகில் உள்ள வனப்பகுதிக்குக் கொண்டு சென்ற சிறிது நேரத்தில் உயிரிழந்தது.

முதற்கட்ட உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு, கால்நடை மருத்துவர் பிரபு கூறுகையில், ‛‛யானையின் மேல்தாடை முழுவதும் புண் இருந்தது. கீழ்த்தாடை உடைந்து, நாக்குத் துண்டாகியிருந்தது. இதனால் உண்ணவும் தண்ணீர் அருந்தவும் முடியாமல் போயிருக்கலாம். முக்கிய உறுப்புகளை அடுத்தகட்ட ஆய்வுக்காக மருந்து ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளோம். வாய், வெடிவைத்துத் தாக்கப்பட்டிருந்தால், யானையின் நாக்கு துண்டாகி, கீழ்த்தாடை உடைந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கூடலூர் வனப் பகுதிக்கு கேரளா வனப்பகுதியிலிருந்தும் யானைகள் இடம் பெயர்ந்து வந்து செல்கின்றன. இந்த யானை, கேரள வனப் பகுதியில் இருந்துகூட வந்திருக்கலாம்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க