வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (04/06/2018)

கடைசி தொடர்பு:19:08 (04/06/2018)

"ஸ்டாலின் கஷ்டம்... ரஜினியுடன்தான் போட்டி!"   - எடப்பாடி பழனிசாமியை நெகிழவைத்த சரத்குமார்

'வரக்கூடிய தேர்தலில் ரஜினிக்கும் உங்களுக்கும் இடையேதான் போட்டி. நான் உங்கள் பக்கம் நிற்பேன்' என எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்திருக்கிறார் சரத்குமார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

சரத்குமார்-எடப்பாடி பழனிசாமி

மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருக்கிறார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். அப்போது, 'வரக்கூடிய தேர்தலில் ரஜினிக்கும் உங்களுக்கும் இடையேதான் போட்டி. நான் உங்கள் பக்கம் நிற்பேன்' என எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்திருக்கிறார் சரத்குமார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். போலீஸாரின் தடியடி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இதுதொடர்பாக நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசிய சரத்குமார், ' மக்களின்மீது தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டு நடவடிக்கை எடுப்பதும், இந்த வழக்குகள் அவர்கள் எதிர்காலத்தையும் தூத்துக்குடி மக்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் என்ற ஐயம் பரவலாக நிலவுகிறது. இந்த வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டு, அவர்கள் வாழ்க்கைக்கு நிம்மதி வழங்க வேண்டும். இந்தப் பயம் கலந்த வாழ்க்கையிலிருந்து மீண்டு, எதிர்காலம்குறித்த நம்பிக்கை பிறந்து, மனஅழுத்தம் குறைந்து, மக்கள் சகஜநிலைக்குத் திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். அதேநேரத்தில், எந்த ஒரு காரணத்திற்காகவும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பளிக்காமல் இருக்கும் உத்தரவாதத்தை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்' என கோரிக்கை மனுவாக அளித்தார். இதன்பிறகு, தமிழக அரசியல் தொடர்பாக தீவிர விவாதம் நடத்தியுள்ளனர். 

அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுகுறித்த கோரிக்கை மனுவை அளித்தாலும், அரசியல்ரீதியாகத்தான் நேற்றைய சந்திப்பு நடந்தது. ஆர்.கே.நகர் தேர்தலில் சரத்குமாரின் ஆதரவை எடப்பாடி பழனிசாமி கேட்டார். அந்தத் தேர்தலில் நடுநிலை வகித்தார் சரத். ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு, 'தினகரன் ஒரு மூழ்கும் படகு' என்பதைப் புரிந்துகொண்டார். தொடக்கத்தில், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர், ஸ்டாலின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர். மோடியின் தமிழக வருகையின்போது, ' என்ன இருந்தாலும் அவர் ஒரு பிரதமர்; கறுப்புக் கொடி காட்டுவது சரியல்ல' என விமர்சித்தார் தினகரன்.  இதை, தமிமுன் அன்சாரி ரசிக்கவில்லை. ' இனி, தினகரனை நம்பிப் பயனில்லை' என்ற முடிவுக்கு வந்தவர், ஸ்டாலின் பக்கம் சாய்ந்துவிட்டார்.

தினகரன்அதேபோல, திருவாடனை தொகுதிக்கு நடிகர் கருணாஸ் போகும்போது, ' உங்கள்மீது பற்று உள்ளவர்கள்தான் தினகரன் மீதும் பாசத்தில் உள்ளனர். உங்களுக்கு வர வேண்டிய ஓட்டுகள் தானாகவே வந்து சேரும். மற்ற சமுதாயங்களின் வாக்குகள் கிடைக்க வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமி பக்கமோ, ஸ்டாலின் பக்கமோ, ரஜினி பக்கமோ செல்லுங்கள்' எனத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். தவிர, கருணாஸ் மீது எடப்பாடி பழனிசாமிக்குத் துளியும் நம்பிக்கையில்லை. 'அவரை நம்ப முடியாது' என்பதில் பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதை அறிந்த பிறகு, ஸ்டாலின் பக்கம் சேர்ந்துவிட்டார் கருணாஸ். ' சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால், நம்முடைய வாக்குகளும் கிடைக்கும். தி.மு.க கூட்டணியில் இருந்தால் மற்றவர்களின் வாக்குகளும் கிடைக்கும்' என கணக்கு போட்டுவருகிறார் கருணாஸ். தனியரசு எம்.எல்.ஏ-வும், சமூகரீதியாக எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கிறார். அரசியல்ரீதியாக, 'தி.மு.க பக்கம் போகலாம்' என்ற எண்ணத்தில் இருக்கிறார். 

சரத்குமாரைப் பொறுத்தவரை, 'இனி தினகரனுடன் நிற்பது எந்த வகையிலும் லாபமில்லை' என்ற முடிவுக்கு வந்துவிட்டார். தினகரன் அணியில் சசிகலா புஷ்பா இருக்கிறார். 'சிட்டிங் எம்.பி., புஷ்பாவுக்கு இருக்கும் முக்கியத்துவம்கூட நமக்குக் கிடைக்காது' என நம்புகிறார். 'இனி வரும் காலங்களில், தினகரனுடன் இருந்து எம்.எல்.ஏ ஆவது சாத்தியமில்லை. ரஜினிகாந்த் எதிர்ப்பை முன்னிறுத்துவதால், ஸ்டாலின் பக்கம் நிற்பதைவிட, எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கலாம்' என்ற முடிவுக்கு வந்துவிட்டார். எனவே, ரஜினி எதிர்ப்பு என்ற மையப் புள்ளியில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்திருக்கிறார். அந்த அடிப்படையில்தான் இந்தச் சந்திப்பு நடந்தது.

இந்தச் சந்திப்பில் எடப்பாடியிடம் பேசிய சரத், ' அரசியலில் ஸ்டாலினுக்கு வெற்றி வியூகங்கள் வகுத்துக்கொடுக்க சரியான அணி அமையவில்லை. அதனாலேயே, இந்தச் சூழ்நிலையில்கூட கஷ்டப்படுகிறார். தமிழன் என்ற அடிப்படையில் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவேன். ரஜினி ஒரு பெரிய சக்தியாக வருவார். தமிழர் அல்லாத ரஜினிக்கும் தமிழரான உங்களுக்கும்தான் போட்டி. எனவே, நீங்களா... ரஜினியா என்ற போட்டிதான் இருக்கும். தமிழ்ச் சாதிகளை ஒன்றிணையுங்கள். வரக்கூடிய தேர்தலில் ஸ்டாலின் மூன்றாவது இடத்துக்குப் போய்விடுவார். தென்மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும். ஸ்டாலின் தலைமையை யாரும் ஏற்கவில்லை. நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன்!' எனக் கூறினாராம். சரத்குமாரின் இந்த வார்த்தைகள் எடப்பாடி பழனிசாமியை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடையவைத்திருக்கிறது!’’ என்றார். 

இந்த மனக்கணக்குக்கெல்லாம் காலம் என்ன கணக்கு போட்டுவைத்திருக்கிறதோ..!