`யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட்டை இனி திறக்க முடியாது!' - பேரவையில் அதிர்ந்த முதல்வர்

``யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட்டை இனி திறக்க முடியாது. ஆலைக்கு அளிக்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன'' என்று  சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பதில் அளித்துள்ளார்.

ஸ்டெர்லைட்

கடந்த மார்ச் 15-ம் தேதி, தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தொடரில், பட்ஜெட் மீதான விவாதம் மட்டுமே நடைபெற்றது. இதையடுத்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்காகவும், நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காகவும், கடந்த மே 29-ம் தேதி சட்டசபைக் கூட்டம் தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு , தி.மு.க வெளிநடப்பு, மாதிரி சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆகிய அனைத்தும் முடிந்து, இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் சட்டசபை கூடியது. இதில், தி.மு.க-வினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி ஆகியவற்றின் மீதான மானியக் கோரிக்கைகுறித்த விவாதம் இன்று நடைபெற்றுவருகிறது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தாமிர உருக்காலை தமிழகத்துக்கு வேண்டாம் எனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது. ஆலைக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்துசெய்யப்பட்டு, நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

அடுத்துப் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசு முடிவு எடுத்தாலே போதும்,  அமைச்சரவையில் தீர்மானம் தேவையில்லை. நீட் தேர்வு போன்ற தேசிய அளவிலான பிரச்னைகளுக்குத்தான் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும். ஸ்டெர்லைட் பிரச்னையில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டியதில்லை’ எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!