வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (04/06/2018)

கடைசி தொடர்பு:13:00 (04/06/2018)

`என்னைத் திருமணம் செய்துகொள்' - காதலியைக் கொடூரமாகக் கொலை செய்த பி.பி.ஏ பட்டதாரி

சென்னையில் திருமணம் செய்ய வலியுறுத்திய காதலியைக் குக்கர் மூடியால் பி.பி.ஏ பட்டதாரி அடித்துக் கொலை செய்துள்ளார். பிறகு, அவரின் உடலை சூட்கேஸில் அடைத்து எடுத்துச் சென்று செங்கல்பட்டில் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலி பொக்கிஷமேரி

செங்கல்பட்டு தாலுகா பழவேலி கிராமம், திண்டிவனம் - சென்னை நெடுஞ்சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண் ஒருவரின் உடல் கடந்த 28-ம் தேதி எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், சென்னை அண்ணாநகரில் தன்னுடைய மகள் பொக்கிஷமேரியைக் காணவில்லை என்று ஜெயந்திமாலா என்பவர் கடந்த 26-ம் தேதி புகார் கொடுத்தார். இவர், நர்ஸாகப் பணியாற்றுகிறார். புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார், பொக்கிஷமேரியைத் தேடிவந்தனர். போலீஸாரின் விசாரணையில் செங்கல்பட்டு பழவேலியில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது பொக்கிஷமேரி என்று தெரியவந்தது. இதனால் அவரைக் கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "அண்ணாநகரைச் சேர்ந்த பொக்கிஷமேரி, எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு தனியார் மருந்தகத்தில் பணியாற்றிவந்தார். அதே மருந்தகத்தில் நெற்குன்றத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் பணியாற்றினார். இவர், பி.பி.ஏ படித்துள்ளார். ஒரே இடத்தில் பணியாற்றியதால் இருவரும் கடந்த 2008-ம் ஆண்டு முதல் காதலித்துள்ளனர். திடீரென இவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணாநகரில் பணியாற்றிய பாலமுருகன், ஜாபர்கான்பேட்டைக்கு இடம் மாறிவிட்டார். 

அதன் பிறகு, பாலமுருகனுக்கும் உதயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்தத் தகவலைத் தெரிந்ததும் பொக்கிஷமேரி அதிர்ச்சியடைந்தார். பாலமுருகனை மறக்க முடியாமல் தவித்த பொக்கிஷமேரி, தன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால், பொக்கிஷமேரியைக் கொலை செய்ய பாலமுருகன் திட்டமிட்டுள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர் நகரில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்கு பொக்கிஷமேரியை வரவழைத்து அங்கு அவரைக் கொலை செய்துள்ளார். இதையடுத்து, பாலமுருகனைக் கைதுசெய்துள்ளோம்" என்றனர். 

பாலமுருகன்

பொக்கிஷமேரியை எப்படி கொலை செய்தேன் என்று பாலமுருகன் போலீஸாரிடம் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ``சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்குச் சென்ற பொக்கிஷமேரியை எம்.ஜி.ஆர் நகருக்கு வரும்படி போனில் அழைத்தேன். அங்குள்ள நண்பன் வீட்டில் வைத்து அவருக்கு அறிவுரை கூறினேன். ஆனால், அவர், எதையும் கேட்கவில்லை. உனக்குத் திருமணமானாலும் பரவாயில்லை. என்னை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள் என்று வற்புறுத்தினார். இதனால், சமையலறையிலிருந்த குக்கரின் மூடியை எடுத்து பொக்கிஷமேரியின் தலையில் ஓங்கி அடித்தேன். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் துடிதுடித்து இறந்தார். பிறகு, அவரின் உடலை, பெரிய சூட்கேஸில் அடைத்தேன். தொடர்ந்து காரில் செங்கல்பட்டுக்குச் சென்று அவரின் உடலை எரித்தேன். பிறகு, எதுவும் நடக்காதுபோல வீட்டுக்கு வந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். 

பாலமுருகனை கைது செய்தது எப்படி என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பொக்கிஷமேரியின் செல்போன் நம்பருக்கு வந்த போன் அழைப்புகளை ஆய்வு செய்தோம். அப்போது, பாலமுருகன் அவரிடம் பேசியது தெரியவந்தது. இதனால்தான் பாலமுருகனிடம் விசாரித்தோம். முதலில் எந்தத் தகவலையும் அவர் சொல்லவில்லை. பிறகு, எங்களின் கிடுக்குப்பிடி கேள்விகளால் அவர் உண்மையைச் சொல்லிவிட்டார். பொக்கிஷமேரி கொலை செய்த தகவலை அவரின் நண்பர், மனைவி என யாரிடமும் பாலமுருகன் தெரிவிக்கவில்லை. தற்போது அவர் கைது செய்யப்பட்ட பிறகுதான் பாலமுருகனின் உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிந்தது" என்றார்.

காதலனால் காதலி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.