கள்ளநோட்டு விவகாரத்தில் மேலும் ஒருவர் சிக்கினார்! தீவிரவாதிகளுடன் தொடர்பா?

கோவை கள்ளநோட்டு விவகாரத்தில் மற்றொரு நபரை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கோவை கள்ளநோட்டு விவகாரத்தில் மற்றொரு நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கள்ளநோட்டு

கோவை, வேலாண்டிபாளையம் மருதக்கோனார் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர், சாய்பாபா காலனியில் இருசக்கர வாகனத்தில் கடந்தவாரம் சென்றபோது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், இவரிடம் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் ஆனந்தனிடம் இருந்த நான்கு 2,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து காவல்துறையினர் பார்த்துள்ளனர். அப்போது, அந்த நோட்டுகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.  

இதையடுத்து, ஆனந்திடம் நடத்திய விசாரணையில் தன் நண்பர் சுந்தர் என்பவர் மூலம், வேலாண்டிபாளையத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கடந்த ஒன்றரை மாதமாக, கலர் ஜெராக்ஸ் நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. அந்த வீட்டிலிருந்து 
1.18 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புள்ள சுந்தர் மற்றும் கிதர் முகமது ஆகியோரைப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு சுந்தர்தான் தலைவர் என்றும் அவருக்கு கிதர் முகமது பக்கபலமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்கள் மூவருக்கும் சிறையில் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், கிதர் முகமது மற்றும் சுந்தர் ஆகியோர் மீது ஏற்கெனவே பல்வேறு கள்ளநோட்டு வழக்குகள் உள்ளன. கிதர் முகமதுக்கு, சில தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், எனவே அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளை, தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். கள்ளநோட்டு, அச்சிடுவதற்காக உயர் ரக காகிதங்களைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், தமிழகத்தைத் தாண்டி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

இந்நிலையில், கிதர் முகமதை ஆனைக்கட்டி பகுதியில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். சுந்தரைத் தேடி தனிப்படை கேரள மாநிலம்  எர்ணாகுளத்துக்கு விரைந்துள்ளனர். இதனிடையே, கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டிருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!