வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (04/06/2018)

கடைசி தொடர்பு:14:00 (04/06/2018)

`ரேஷன் அட்டை தராமல் அலைக்கழித்தனர்!' - பசியால் உயிரிழந்த ஜார்க்கண்ட் பெண்மணி

ரேஷன் அட்டை கிடைக்காமல் வறுமையில் வாடிய பெண்மணி, உயிரிழந்த சோகம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. 

ரேசன்

ஜார்கண்ட் மாநிலம், கிரிதிஹ் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரிதேவி. இவரின் தாயார் அண்மையில் மரணம் அடைந்தார். இதையடுத்து, புதிதாக ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்திருந்தார். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், ரேஷன் பொருள்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், பசிக் கொடுமையால் நேற்று சாவித்திரிதேவி உயிரிழந்தார். 

இதுகுறித்து அவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், ``சாவித்ரிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வெளிவேலைக்கும் எப்போதாவதுதான் இவர்கள் செல்வார்கள். அப்போது, சிறிய அளவிலான ரொட்டித் துண்டுகளை வாங்கி வருவார்கள். மிகுந்த வறுமையில் இருந்தார் அவர். இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக சாவித்திரிக்கு உணவு கிடைக்கவில்லை. பலமுறை ரேஷன் அட்டையை வழங்கக்கோரி அதிகாரிகளிடம் முறையிட்டார். அவரது கோரிக்கையை அதிகாரிகள் அலட்சியப்படுத்தினர். இதனால், உணவு கிடைக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார்" என்றார். 

சாவித்திரி மரணம் தொடர்பாகப் பேசிய தும்ரி தொகுதி எம்.எல்.ஏ ஜெகன்னாத் மக்டோ, "உயிரிழந்த பெண்மணியின் இறப்புக்கு அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். சட்டசபையில் இந்தப் பிரச்னை குறித்துப் பேசுவேன்" என்றார்.