வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (04/06/2018)

கடைசி தொடர்பு:14:30 (04/06/2018)

வன்கொடுமை வழக்கில் 30 நாளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி!

ஒடிசாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்  சுமத்தப்பட்ட 30 நாளிலேயே குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளார் போக்ஸோ சட்ட சிறப்பு நீதிபதி.

வன்கொடுமை

ஒடிசா, சம்பல்பூர் மாவட்டத்தில் கடந்த மே 3-ம் தேதியன்று 16 வயது  சிறுமி, அஃசல் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறுமியின் நண்பரான அஃசல் உள்பட மேலும் நான்கு பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.  இதையடுத்து, கடந்த மே 23-ம் தேதியன்று சிறுமி தனது  வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வழக்கு ஒடிசா மாநிலம், போக்ஸோ சட்டத்தின் சிறப்பு நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் கடந்த சனிக்கிழமையன்று காலை தொடங்கிய விசாரணை இடைவிடாமல் சுமார் 14 மணிநேரம் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதன் முடிவில் குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி  உதய்பானு ஜெனா. ஒடிசாவில் இதுவரை நடந்த பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மிக விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜம்மு - காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பின் போக்ஸோ சட்டம்  கட்டாயமாக்கப்பட்டு அதன் விசாரணைகளும் விரைவில் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.