வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (04/06/2018)

கடைசி தொடர்பு:14:37 (04/06/2018)

`முறுக்கிட்டுப் போன மாப்பிள்ளை!' - ஸ்டாலினைக் கலாய்த்த ஜெயக்குமார்

` தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் தாமாக வெளியேறிச் சென்ற தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், தற்போது தாங்களாகவே உள்ளே வந்துள்ளனர்' எனக் கலாய்த்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். 

ஜெயக்குமார்

சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தை தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதுகுறித்து விளக்கம் அளித்த தி.மு.க செயல் தலைவர்,  ' தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கும்வரை சட்டப் பேரவையில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் தி.மு.க பங்கேற்காது' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்குப் பிறகு பேசிய ஸ்டாலின், ' வரும் திங்கள்கிழமை முதல் சட்டசபைக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும்' எனத் தெரிவித்தார்.

தி.மு.க பங்கேற்பது குறித்து இன்று பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `ஜனநாயகத்தில் சட்டமன்றம் என்பது மிகப்பெரிய அமைப்பு. இதை, சரியாகப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். தாமாக வெளியேறிச் சென்ற தி.மு.க-வினர் தற்போது, அவர்களாகவே திரும்பி வருகின்றனர். கடந்த திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என நான்கு நாள்களாக சட்டசபை நிகழ்ச்சியில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்காமல் சென்றுவிட்டனர். இந்த நான்கு நாள்களில் எவ்வளவோ விஷயங்களைப் பேசி விவாதித்து தீர்வு கண்டிருக்கலாம். எது எப்படியோ, அவர்களை நான் குறை சொல்லவில்லை. கோபமாக முறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை, மீண்டும் திரும்பி இருக்கிறார். எனவே, தி.மு.க-வினர் மீண்டும் சட்டசபைக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது' என்றார் சிரித்தபடியே.