வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (04/06/2018)

கடைசி தொடர்பு:15:52 (04/06/2018)

ம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன்!

சீமான்

ம.தி.மு.க - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மோதிக்கொண்ட வழக்கில் சீமானுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்ஜாமீன் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடந்த 19-ம் தேதி திருச்சி விமான நிலையம் வந்தனர். அவர்களை வரவேற்க வந்த இரு கட்சித் தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் பலத்த காயமடைந்த நிலையில் இரு தரப்பினரும் பரஸ்பரம், விமான நிலையத்தில் புகாரளித்தனர். நான் உட்பட் 7 பேர்மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சம்பவம் நடக்கும்போது அந்தப் பகுதியில் நான் இல்லை. மேலும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன். எனவே, இந்த வழக்கில் என்னை கைது செய்வதிலிருந்து முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் உள்ளிட்ட 7 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.