`` `காலா’ குறித்து பேசினீர்களா..?’ - குமாரசாமியைச் சந்தித்த பின் கமல் அளித்த அதிரடி பதில்

கர்நாடக முதல்வர் குமாரசாமியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன்

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலுக்குப் பின் நடந்த மிகப் பெரிய சர்ச்சை குழப்பங்களைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் முதல்வராகப் பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி. இவரின் பதவியேற்பு விழாவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமாகக் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த கமல்ஹாசன், அன்றைய தினமே பெங்களூரு சென்று குமாரசாமியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் கமல். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கமல், “குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட வந்தேன். இந்தச் சந்திப்பு கூட்டணிக்கானதோ திரைப்படம் தொடர்பானதோ இல்லை முற்றிலும் மக்களுக்கானது என்றார். இதன் பின்னர் செய்தியாளர்கள், `காலா' திரைப்படம் குறித்து பேசினீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த கமல், 'காலா' கர்நாடகாவில் வெளியாவது அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை. திரைப்படங்களைவிட காவிரி நீர் மிக முக்கியமானது. எனவே, காவிரி குறித்து மட்டுமே எங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது” எனக் கூறினார்.

அதன் பின் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, “கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் விவசாயிகள் மற்றும் மக்கள், சகோதர சகோதரிகளாகவே சமமாக நீரை பங்கிட்டுக்கொள்வதுதான் நிரந்தத் தீர்வை தரும் எனக் கமல் என்னிடம் கூறினார். காவிரி பிரச்னை கடந்த சில நாள்களாக நடப்பது இல்லை. அது 100 வருடங்களாகவே இரு மாநிலங்களுக்கிடையே நடைபெற்று வருகிறது. காவிரி பிரச்னை தொடர்பாகத் தமிழக அரசிடம் பேசத் தயாராக உள்ளோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!