`எங்களை நோயாளிகளாக ஆக்காதீர்கள்' - கொந்தளிக்கும் அரசு செவிலியர்கள்

Karaikal Hospital

காரைக்கால் மாவட்ட அரசுப் பொது மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதால் பணிச் சுமை அதிகரித்தது என்றும் இதனால் செவிலியர்கள் நோயாளிகளாக மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் செவிலியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.  

காரைக்கால் அரசு மருத்துவமனை செவிலியர்கள்

காரைகால் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) விக்ராந்த் ராஜாவை, புதுச்சேரி செவிலியர் நலச் சங்கத் தலைவி ஜானகி தலைமையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், ''காரைக்கால் மாவட்ட அரசுப் பொது மருத்துவமனையில் 190 செவிலியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், நடப்பு ஆண்டில் 120 செவிலியர்கள்தான் பணியில் உள்ளனர். இதில், பிரசவம், விடுமுறை, உயர் படிப்பு மற்றும் பணிமாற்றம் போன்ற காரணங்களால் தற்போது பணியில் வெறும் 64 செவிலியர்களே இருக்கின்றனர். இவர்களே பற்றாக்குறையில் உள்ள மற்ற செவிலியர்கள் பணியையும் சேர்த்து செய்ய வேண்டியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாதத்தில் 3 நாள்கள் மட்டுமே செவிலியர்கள் இரவில் பணியாற்றி வந்தனர். தற்போது செவிலியர் பற்றாக்குறை காரணமாக 9 நாள்கள் இரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறோம்.

மக்கள் தொகை பெருக்கம், வாகன எண்ணிக்கையின் அதிகரிப்பு இவற்றின் காரணமாக, சாலை விபத்துகள் பெருகிவிட்டன. பலத்த காயங்களுடன் வரும் நோயாளிகளைச் செவிலியர்களே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், மன அழுத்தம், மன உளைச்சல், உடல் பாதிப்பு இவற்றின் காரணமாகச் செவிலியர்கள் நோயாளிகளாக ஆக்கப்படுகின்றனர். இப்பணிச் சுமை தாங்காமல் ஒரு செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்திருக்கிறது. தலைமைச் செவிலியர், செவிலியர் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணியிடங்களிலும் காலியாக உள்ளது. டயாலிஸ் பிரிவுக்கு உரிய டெக்னீசியன்கள் இல்லை. ரத்த வங்கியிலும் டெக்னீசியன்கள் பற்றாக்குறை. இப்பணிகளை எல்லாம் செவிலியர்களே செய்ய வேண்டியுள்ளது.

இந்நிலையில், தற்போது மருத்துவமனைக்குக் கூடுதல் டயாலிஸ் மிஷின்கள் வருவதாக அறிகிறோம். ஏற்கெனவே, டெக்னீசியன்கள் பொதுமான அளவில் இன்றி அதைச் சமாளிக்கும் செவிலியர்கள், இப்பணியையும் கூடுதலாக ஏற்றுச் செய்வது சிரமம். அத்துடன், விரைவில் இந்த மருத்துவமனைக்கு நவீன தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட இருப்பதாக அறிகிறோம். எனவே, செவிலியர் பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே பொதுமக்களுக்கு முன்பைவிட அதிக சேவையை எங்களால் வழங்க முடியும். எங்கள் கோரிக்கையை ஏற்று, செவிலியர் பணியிடங்களை முழுவதுமாக நிரப்பி, எங்கள் வாழ்வில் புத்தொளி ஏற்ற வேண்டிக்கொள்கிறோம்”  எனக் கூறப்பட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!