வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (04/06/2018)

கடைசி தொடர்பு:17:00 (04/06/2018)

`விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக் கருத்து’ - மத்திய வேளாண்துறை அமைச்சர்மீது வழக்கு பதிவு

ஊடக வெளிச்சம் பெறவே விவசாயிகள் போராடுகிறார்கள் என்று கருத்து தெரிவித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்

விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியப்பிரதேசம், குஜராத், மகராஷ்ட்ரா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 10 நாள்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் நான்காவது நாளை எட்டியிருக்கிறது. போராட்ட நாள்களில் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட பொருள்களைச் சந்தைகளுக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி, அவற்றைச் சாலைகளில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து சிக்கலில் மாட்டியிருக்கிறார் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங். 

பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாமோகன் சிங், ``நாடு முழுவதும் 12 முதல் 14 கோடி விவசாயிகள் இருக்கின்றனர். இதில், ஒவ்வொரு விவசாயச் சங்கமும் 1,000 முதல் 2,000 விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டிருப்பது இயல்பு. அவர்களில் ஒருபகுதியினர் ஊடக வெளிச்சத்துக்காகப் போராட்டங்கள் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்’ என்று சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்திருந்தார். வேளாண்துறை அமைச்சரின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாக்பூர் விவசாயிகள் சாலையில் பாலைக் கொட்டி போராட்டம் நடத்தினர். இந்தநிலையில், சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்த அமைச்சர் ராதாமோகன் சிங்குக்கு எதிராகப் பீகார் மாநிலம் முஸாபர்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.