வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (04/06/2018)

கடைசி தொடர்பு:17:20 (04/06/2018)

`வாக்குமூலம் அளிக்கலாம்; ரகசியம் காக்கப்படும்' - தூத்துக்குடியில் நீதிபதி அருணா பேட்டி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை  செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளார். 

நீதிபதி அருணா

தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனைத் தமிழக அரசு அமைத்துள்ளது. சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அருணா ஜெகதீசன், ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக ஐ.ஜி கபில்குமார் சரத்கர் மற்றும் மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அருணா ஜெகதீசன், "தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக இன்று முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். தூத்துக்குடி பழைய சுற்றுலா மாளிகை அலுவலகத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி, ஓய்வுபெற்ற நீதிமன்ற அலுவலர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர் என 4 பேர் பணியில் இருப்பார்கள். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், காயம்பட்டவர்கள், உயிரிழந்த குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் என அனைத்து தரப்பினரும் எழுத்து மூலம் வாக்குமூலம் அளிக்கலாம். தூத்துக்குடியில் உள்ள கேம்ப் அலுவலகத்தில் நேரில் வந்து தர இயலாதவர்கள் தபால் மூலமாகத் தூத்துக்குடியிலும், சென்னை அலுவலகத்திலும் அனுப்பலாம்.

இது குறித்த வீடியோ ஆதாரங்களை அளிப்பவர்கள் 7 நாள்களுக்குள் அனுப்பலாம். ஜூன் 22-ம் தேதி வரை வாக்குமூலம் பெறப்படுவதாக இருந்த கால அளவை இந்த மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளேன். முதல்கட்டமாகக் காயம் அடைந்தவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரணை செய்ய இருக்கிறேன். தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரையும் சந்திக்க இருக்கிறேன். துப்பாக்கிச்சூடு நடந்த இடங்கள், ஸ்டெர்லைட் ஆலை, ஆலை குடியிருப்பு ஆகிய இடங்களில் கள ஆய்வு செய்யப்படும்.

முந்தைய ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி மகேந்திரன், பணியில் இருந்த துணை வட்டாட்சியர்கள், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறையினர், 7 பேர் உடல்களை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் விசாரிக்கப்படுவார்கள். நேர்மையான முறையில் இந்த விசாரணை நடத்தப்படும்.
வாக்குமூலம், ஆதாரங்கள் போன்ற ஆவணங்களை அளிப்பவர்கள் எந்தவிதமான அச்சமும் ஒளிவுமறைவும் தயக்கமும் இன்றி வரலாம். வாக்குமூலம் அளித்தவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். வாக்குமூலம் அளித்தவர்களுக்குத் தேவைப்பட்டால் சம்மன் அனுப்பப்பட்டு  விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது" என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க