`ஸ்டெர்லைட் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது!’ - உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காகக் கருதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

உச்ச நீதிமன்றம்

வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் மக்கள் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியை அடுத்த குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நடத்தி வந்த போராட்டத்தின் 100 வது நாளான கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அந்தப் போராட்டத்தில் கலவரம் ஏற்படவே, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், அப்பாவிப் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்; 102 பேர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அங்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவினர் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களுக்கு ஏற்கெனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட இருக்கின்றன. 

இந்தநிலையில், அவர்கள் 6 பேரின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர் குழுவில் தங்களது தரப்பு மருத்துவர் ஒருவர் இடம்பெற வேண்டும் எனவும், அதற்கு அனுமதி அளித்து உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், கோடைக்கால அமர்வுக்குப் பின்னர், எந்தத் தேதியில் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதையும் உச்ச நீதிமன்றம் தற்போது அறிவிக்கவில்லை. இதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!