வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (04/06/2018)

கடைசி தொடர்பு:17:02 (04/06/2018)

ஸ்டெர்லைட்டுக்கு முன் மூடப்பட்ட விஸ்கோஸ் ஆலை இப்போது எப்படி இருக்கிறது? #VikatanExclusive

விஸ்கோஸ் ஆலை இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறியச் சென்றோம்.

ஸ்டெர்லைட்டுக்கு முன் மூடப்பட்ட விஸ்கோஸ் ஆலை இப்போது எப்படி இருக்கிறது? #VikatanExclusive

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு முன்னதாக, தமிழகத்தில் மக்களின் போராட்டம் காரணமாக மூடப்பட்ட பெரும் தொழிற்சாலை விஸ்கோஸ் ஆலை. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் பவானி ஆற்றையொட்டி பச்சைப் பசேல் பகுதிக்குள் இந்தப் பிரமாண்ட ஆலை இயங்கி வந்தது. ஆலையைச் சுற்றிலும் யானைக்காடு. வனப் பகுதியையொட்டி அமைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவித்த ஆலை இது. சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் விரிந்துகிடந்த ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். மற்ற நிறுவனங்களில் போராட்டம் நடத்திதான் போனஸ் பெறவேண்டிய நிலையில் தொழிலாளர்கள் இருப்பார்கள். விஸ்கோஸ் ஆலையோ 60 சதவிகிதம் வரை தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கியது. லட்சுமி மெஷின் வொர்க்ஸ், ரூட்ஸ், ப்ரிக்கால், எல்.ஜி வழியில் கோவை மாவட்டத்தின் அடையாளங்களில் விஸ்கோஸ் நிறுவனமும் ஒன்று. 

விஸ்கோஸ் ஆலை

பாலியஸ்டர், பருத்திக்கு அடுத்தபடியாக அதிகளவில் ஆடை தயாரிக்கப் பயன்படுவது ரேயான் நூலிழை. நீலகிரியில் வானுயர வளர்ந்து நிற்கும் யூகலிப்டஸ் மரங்கள்தாம் நூழிலைக்கு மூலப்பொருள். முதலில் மரக்கூழ் தயாரித்து அதிலிருந்து Viscose staple fibre எடுக்கப்பட்டு, ரேயான் நூலிழை உற்பத்தி செய்யப்படும். இதன் உற்பத்திக்குக் கார்பன்-டை- சல்பைடு உள்ளிட்ட வேதிப் பொருள்களும் பயன்படுத்தப்பட்டன. ஆலையில் பணி புரிந்த தொழிலாளர்கள் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலந்ததால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சுவாசக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டனர். புற்றுநோய் தாக்கமும் அதிகம் இருந்தது. ஆலையிலிருந்து வெளியேறிய கழிவுநீரில் கந்தகம் அதிகளவில் கலந்திருந்தது. ஆலைக்குப் பின்னால் ஓடும் பவானி ஆற்றில் கழிவுநீர்  விடப்பட்டது. இதனால், பவானி ஆறும் நாசமானது. 

விஸ்கோஸ் ஆலைக்காக பவானி ஆற்றில் உள்ள பம்ப்ஹவுஸ்

சுற்றுச்சூழல் பாதிப்பு, நோய் தாக்கம், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, பவானி ஆறு மாசுபாடு என்று தொடர்ந்து விஸ்கோஸ் ஆலைமீது புகார்கள் எழுந்தன. ஆலைக்கு எதிராக தன்னெழுச்சியாக மக்கள் போராட்டங்கள் நடத்தினர். 13 ஆண்டு கால தொடர் போராட்டத்துக்குப் பின், 2001-ம் ஆண்டு விஸ்கோஸ் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. விஸ்கோஸ் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திலும் தடியடி பிரயோகம் இருந்தது. துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. ஏராளமானோர் காயமடைந்தனர். கோவை அவினாசி சாலையில் இருந்த `விஸ்கோஸ் டவர் ' மக்களால் தொடர்ந்து முற்றுகையிடப்பட்டது. ஆலை மூடப்பட்ட போது உள்ளே 201 டன் கார்பன்டை ஆக்ஸைடு, 700 டன் கந்தகத்துகள்கள், 50 டன் சல்ஃபரிக் ஆக்ஸைடு, 300 டன் மரக்கரியும் இருந்தன. இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்த, மாவட்ட நிர்வாகம் தொழிற்சாலை நிர்வாகத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்தது.

கடந்த 2006-ம் ஆண்டு கோவை மாவட்ட நிர்வாகம், விஸ்கோஸ் ஆலைக்குள் சில பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்றது. மிக பிரமாண்டமாகக் காணப்பட்ட ஆலை பாழடைந்து கிடந்தது. பாதி உடைந்தும் உடையாமல் கிடந்த பிரமாண்ட இயந்திரங்கள் ஆளை மிரள வைத்தன. டன் டன்னாகக் குவிந்துகிடந்த கந்தகத்துகள்கள் கண்களில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியது. ஒரு ஆலை மூடப்பட்டால் அதோடு முடிந்து விடுமா? தொழிலாளர்கள் செட்டில்மென்ட் பிரச்னைகள் எல்லாம் இருக்கும் அல்லவா? விஸ்கோஸ் ஆலைக்குச் சொந்தமான இயந்திரங்கள், சொத்துகள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவற்றை விற்று செட்டில்மென்ட் செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஸ்டெர்லைட் மூடப்பட்டுள்ள நிலையில் 12 வருடங்களுக்குப் பிறகு விஸ்கோஸ் ஆலை எப்படி இருக்கிறது என்பதை அறிய சிறுமுகை சென்றோம். 

விஸ்கோஸ் ஆலைக்குள் இயங்கிய சிபிஎஸ் இ பள்ளி

எங்கு நோக்கினும் பசுமை போர்த்தியிருந்த சாலை அது. ரியல்எஸ்டேட் தொழில் சகட்டுமேனிக்கு வளர்ந்திருந்தது. அழகிய குட்டி குட்டி வீடுகள் தென்பட்டன. ஆலை வாயிலில், `சவுத்இந்தியா விஸ்கோஸ்' என்கிற பெயர் மாற்றப்பட்டு, `fair deal suppliers ltd’ என்ற பெயரில் போர்டு மாட்டப்பட்டிருந்தது. வாட்ச்மேனிடம் பேச்சுக் கொடுத்தோம். `உள்ளே போகலாமா' என்று கேட்டதும் சற்று அதிர்ந்தவர், `யாரும் போகக் கூடாது. அதான் என்னைக் காவலுக்குப் போட்டுருக்காங்க' என்றார். `சேட்டுக்காரங்க இந்த இடத்தை வாங்கிட்டாங்க. உள்ளே எல்லாம் போக முடியாது' என்றார் கறாராக. அவரிடம் பேசி பலன் இல்லை என்று தெரிந்தது. ஆலையை வெளிப்புறமாகச் சுற்றிப் பார்க்க புறப்பட்டோம். ஆங்காங்கே சுவர்கள் இடிந்துகிடந்தன. சுமார் 2 கி.மீ தொலைவு சுற்றித் திரும்பினால், பவானி ஆற்றில் இரு பிரமாண்ட பம்ப்ஹவுஸ்கள் இடிந்தும் இடியாத நிலையிலும் தென்பட்டன. விஸ்கோஸ் ஆலைக்காகத் தண்ணீர் எடுக்க கட்டப்பட்ட பம்ப்ஹவுஸ்கள் இவை. 

விஸ்கோஸ் ஆலையில் இடிந்து தரைமட்டமான கட்டடங்கள்

மற்றொரு பம்ப்ஹவுஸில் ஆடு, மாடுகள் கட்டப்பட்டிருந்தன. மனித நடமாட்டமே இல்லாத அந்த யானைக்காட்டுக்குள், பாட்டி ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். "என்ன பாட்டி தனியா இருக்கீங்களே, பயமா இல்லையா... இந்த ஆலையைப் பத்தி தெரியுமா" என்று கேட்டதும்.. "எய்யா எப்படி லட்சுமிகடாட்சமா இருந்த இடம் தெரியுமா இது. இப்போ மண்மேடா ஆயிட்டுது" எனப் படபடத்தார்.

மணல்மேடாகத் தெரிந்த ஒரு பகுதி வழியாக ஆலைக்குள் புகுந்தோம். ஆலை மூடப்பட்டிருந்தபோது கொள்ளையர்கள் உள்ளே புகுந்து இரும்புத் தளவாடங்களை, பொருள்களை, இயந்திரங்களை உடைத்துக் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கொள்ளையடிக்கும் பொருள்களை பாவனி ஆற்றுக்குள் போட்டுவிட்டு, இருள் கவிழ்ந்ததும் சகவாசமாகப் பரிசல்களில் அக்கரைக்குக் கடத்திக்கொண்டு செல்வார்கள். கொள்ளைக்கும்பல்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்படுவதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர். 

காட்டுப் பகுதி வழியாக உள்ளே செல்ல சற்று பயமாகவே இருந்தது. எங்கே நம்மையும் கொள்ளையர்கள் என்று நினைத்துவிடக் கூடாதே! 2 கி.மீ தொலைவு நடந்திருப்போம். கட்டடங்கள் தெரிய ஆரம்பித்தன. சில கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் தரை மட்டமாக்கப்பட்டிருந்தன. `விஸ்கோஸ் கெஸ்ட் ஹவுஸ் ' என்கிற ஒரே கட்டம் மட்டுமே இருந்தது. வாகனங்கள் புதர் மண்டிக் கிடந்தன. இன்னும் கொஞ்சம் தொலைவு சென்றால் `சவுத் இந்தியா இன்டர்நேஷனல் பள்ளி’ எங்களை வரவேற்றது. விஸ்கோஸ் ஆலையில் பணி புரியும் ஊழியர்களின் குழந்தைகள் படிக்க சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்ட பள்ளி அது. இந்தக் கட்டடம் ஒன்றுதான் முற்றிலும் இடிக்கப்படாமல் ஆலை வளாகத்துக்குள் இருந்தது. ஆலைக்கு மறுபுறம் ஊழியர்கள் குடியிருப்பும் பாழடைந்த நிலையில் காணப்பட்டது. 

விஸ்கோஸ் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு

பொதுவாகவே ஓர் ஆலை மூடப்பட்டால் அந்தப் பகுதி மக்கள் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திப்பார்கள். விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டதும் கூட, தொடக்கத்தில் மேட்டுப்பாளையம் வட்டார மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். நாளைடைவில் அதிலிருந்து மீண்டுவிட்டனர். தூத்துக்குடியில் தற்போது ஸ்டெர்லைட் மூடப்பட்டால் பொருளாதார நிலை பாதிக்கப்படும் என்றும் வதந்தி பரப்பப்படுகிறது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு முன்னரே ஸ்பிக், அனல்மின்நிலையம் போன்ற பெரும் தொழிற்சாலைகள், மீன் பதப்படுத்தும் நிறுவனங்கள், துறைமுகம், கப்பல் நிறுவனங்கள் தூத்துக்குடியில் நிறைந்திருந்தன.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் எந்தத் தொழிற்சாலைக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. அந்த வகையில், ஸ்டெர்லைட்தான் கடைசி நிறுவனமாக இருக்க வேண்டுமென்பதே அனைவரின் ஆசை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்