Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

பனைமர பீரங்கிகள்.. முங்குநீச்சலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள்.. டச்சுப்படை வீழ்ந்த 'வெற்றித்தூண்' கதை!

Colachel: 

சியக் கண்டத்தின் போர் வரலாற்றில், முதல் முறையாக ஆங்கிலேய ராணுவத்தைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது திருவிதாங்கூர் ராணுவம்! 277 ஆண்டுகளுக்கு முன் இந்த வெற்றியின் நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நிறுவப்பட்ட வெற்றித்தூண் இயற்கையை வென்று இன்றும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.

குளச்சல் வெற்றித்தூண்

ஆங்கிலேயர்கள் நாடு பிடிக்கும் மும்முர முயற்சியில் இருந்த காலகட்டம் அது. நம் நாட்டில் ஈட்டி, வாள், கேடயம் போன்ற இரும்பு ஆயுதங்களை வீரர்கள் தாங்கியிருந்த சமயம். துப்பாக்கி போன்ற நவீனப் போர் தளவாடங்களுடன் சமஸ்தானங்களை அச்சுறுத்தி வந்தது பிரிட்டிஸ் ராணுவம். ஆனால், ஆசியக் கண்டத்தின் போர் வரலாற்றில், ஆங்கிலேய ராணுவம் முதன்முறையாகக் குளச்சல் கடற்கரையில் மண்டியிட்டு மண்ணைக் கவ்வியது.

சமஸ்தானம் மீது படையெடுத்த டச்சு தளபதி:

சுதந்திரத்துக்கு முன்புவரை கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஓர் அங்கமாக இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமையிடமாகத் தக்கலையை அடுத்துள்ள பத்மநாபபுரம் அரண்மனை விளங்கியது. நெல் விளைவித்துச் சோறுபோடும் நெற்களஞ்சியமான நாஞ்சில் நாடு. பூக்கள் விளைவித்து மணம் பரப்பும் தோவாளை. வெளிநாடுகளுடனான வர்த்தகத்துக்குக் குளச்சல் இயற்கை துறைமுகம். காவல் தெய்வமாக திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் எனத் திருவிதாங்கூர் சாம்ராஜ்யம் சிறப்புற்று விளங்கியது. ஆசியக் கண்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் தனது படைபலத்தால் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றது ஆங்கிலேய ராணுவம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைக் கைப்பற்றும் நோக்கில், 1741 ம் ஆண்டு ஜனவரி 13 ம் தேதி டச்சு கப்பல்படை குளச்சல் துறைமுகம் நோக்கிவந்தது. தளபதி டிலனாய் தலைமையில் துப்பாக்கி போன்ற நவீன ஆயுதங்கள் தாங்கி சிப்பாய்கள் வந்தனர். அந்தச் சமயத்தில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்ம மகாராஜாவின் படைகள் தென் பகுதியில் கர்நாடகா நவாப்புகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. குறைவான படைவீரர்களே தலைநகர் பத்மநாபபுரத்தில் இருந்தனர். இவர்களிடம் வாள், வில், வேல் போன்ற ஆயுதங்களே இருந்தன. எதிரி நவீன ஆயுதங்களை தாங்கி நிற்கிறான். நிலைமையை சமயோஜிதமாகச் சமாளிக்க முடிவுசெய்தது திருவிதாங்கூர் சமஸ்தானம்.

சமஸ்தானம் மீது படையெடுத்த டச்சு தளபதி: புடைப்பு சிற்பம்

பனைமரத்தை பீரங்கியாக்கினார்கள்:

திருவிதாங்கூர் படையினர் மாட்டு வண்டிகளை கடற்கரையில் வரிசையாக நிறுத்தி அதன்மீது பனை மரத்துண்டுகளை வைத்தார்கள். இது கப்பலிலிருந்து பார்ப்பவர்களுக்குப் பீரங்கி போன்று காட்சியளித்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் பீரங்கிப்படை இருக்கிறதோ எனத் தயங்கியபடி கடலில் நீண்டநாள்கள் நங்கூரமிட்டு நின்றது டச்சுப்படை. டச்சுப்படையைச் சீர்குலைக்கும் வகையில் குளச்சல் மக்கள் உதவியுடன் கடலில் நீந்திச்சென்று கப்பல்களில் ஓட்டைபோட்டு மூழ்கடிக்கும் செயல்களும் அரங்கேறின. இதற்கிடையில் நவாப்புகளுடன் போர் முடிந்து திருவிதாங்கூர் படை வீரர்கள் குளச்சல் திரும்பினர். இறுதிக்கட்டப்போர் குளச்சல் கடற்கரையில் நடந்தேறியது. இதில் திருவிதாங்கூர் சமஸ்தான படை டச்சுப்படையை வெற்றி கொண்டது. படை தளபதி டிலனாய் 1741 ம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி சரணடைந்தார். அவரைக் கைது செய்து மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜா முன் நிறுத்தினர். மன்னர் முன் மண்டியிட்ட டிலனாய், வீரமிக்க திருவிதாங்கூர் படைக்கு நவீன ஆயுதப் பயிற்சி வழங்குவதற்கு தன்னை அனுமதிக்கும்படி வேண்டினார். மன்னரின் நம்பிக்கையைப் பெற்ற டிலனாய் பிற்காலத்தில் திருவிதாங்கூர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். டிலனாய் பல போர்க்களங்களை சந்தித்துத் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்திருக்கிறார். விசுவாசத்துக்கு மரியாதை செலுத்தும்விதமாக டிலனாய் மறைவுக்குப் பிறகு தக்கலை அருகே புலியூர்குறிச்சி கோட்டைக்குள் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடம் இன்று சுற்றுலாத்தலமாக உள்ளது.

புடைப்பு சிற்பம்: மன்னர் முன் மண்டியிட்ட டிலனாய் 

குளச்சல் யுத்த வரலாறு கேரளப் பாடப் புத்தகத்தில்:

இது ஒருபுறம் இருக்க... டச்சுப்படையைத் திருவிதாங்கூர் ராணுவம் வெற்றி பெற்றதன் நினைவாகக் குளச்சல் கடற்கரையில் மார்த்தாண்டவர்மா மகாராஜாவால் வெற்றித்தூண் ஒன்று நிறுவப்பட்டது. 15 அடி உயரத்தில் ஒரே கல்லில் அமைக்கப்பட்ட வெற்றித்தூணின் முகட்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முத்திரையான சங்கு செதுக்கப்பட்டுள்ளது. வெற்றித்தூணின் அடிப்பாகத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான படை டச்சுப்படையை 1741 ம் ஆண்டு ஜூலை 31 ம் நாள் வெற்றிகொண்டதன் நினைவாக நிறுவப்பட்ட வெற்றித்தூண் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி ஏற்பட்ட சுனாமியிலும் இந்த வெற்றித்தூணுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம். இந்த வெற்றித்தூணுக்கு அரசியல் கட்சியினரும், சமூக இயக்கங்களும் ஆண்டுதோறும் ஜூலை 31 ம் தேதி வீரவணக்கம் செலுத்துவது மரபு. 2009 ம் ஆண்டு முதல் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் உத்திராடம் திருநாள் மகாராஜா மற்றும் பாங்கோடு மிலிட்டரி கேம்பைச் சேர்ந்த 16 ம் மெட்ராஸ் ராணுவத்தினர் வெற்றித்தூணுக்கு 24 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர். அதன்பிறகு ஆண்டுதோறும் வெற்றித்தூணுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 2014 ம் ஆண்டு குளச்சல் நகராட்சி சார்பில் வெற்றித்தூணைச் சுற்றி காம்பவுண்ட் அமைக்கப்பட்டு குளச்சல் போர் வரலாற்றை விளக்கும் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. புடைப்புச் சிற்பத்தில் டச்சுப்படையினர் போர்தொடுத்து வருவதும், மார்த்தாண்டவர்மா மகாராஜாவிடம் டிலனாய் சரணடையும் நிகழ்ச்சியும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேய ராணுவத்தைச் சாமர்த்தியமாகச் சரணடைய வைத்த போர் நிகழ்வு கேரளப் பாடப்புத்தகத்தில் `குளச்சல் யுத்தம்' என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்று தமிழகப் பாடத்திட்டத்தில் குமரி மண்ணின் பெருமை இடம்பெறவேண்டும் என்பது மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நாகர்கோவிலிலிருந்து எப்படிச் செல்லலாம் :

நாகர்கோவிலிலிருந்து 24 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது குளச்சல். இங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து சிற்றுந்து அல்லது ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்து குளச்சல் மீன்பிடித் துறைமுகப் பகுதி அருகில் இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 3 நிமிடம் நடந்தாலே குளச்சல் வெற்றித்தூணை அடைந்துவிடலாம். அடுத்த மாதம் 31 ம் தேதி காலை 9 மணிக்குச் சென்றால், ராணுவ வீரர்கள் வெற்றித்தூணுக்கு மிடுக்குடன் மரியாதை செலுத்தும் உணர்ச்சிமிகு காட்சியைக் காணலாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement