`அசம்பாவிதம் நடந்தால் நீங்கதான் பொறுப்பு' - முதல்வருக்கு எதிராகச் சீறும் பொதுமக்கள்

தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய மேம்பாலம் இன்று திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாலம் திறப்பதற்கு எதிராகப் பல மாதங்கள் போராடி வந்தவர்களில் 5 பேரை போலீஸார் வீடு புகுந்து இன்று அதிகாலையிலேயே கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய மேம்பாலம் இன்று திறக்கப்பட்டது. இதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாலம் திறப்பதற்கு எதிராகப் பல மாதங்கள் போராடி வந்தவர்களில் 5 பேரை போலீஸார் வீடு புகுந்து இன்று அதிகாலையிலேயே கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேம்பாலத்துக்கு எதிராக பொதுமக்கள்

தஞ்சையிலிருந்து நாகை செல்லக்கூடிய வண்டிக்காரத் தெரு சாலையில் சாந்தபிள்ளை கேட் மேம்பாலம் கடந்த 2013-ம் ஆண்டு 42 கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் 2015-ம் ஆண்டு நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. போதிய நிதி இல்லாத காரணத்தால் முதல்வர் நிதியிலிருந்து மேலும் 10 கோடி ரூபாய் பெறப்பட்டு 52 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. மேம்பாலத்தின் நீளம் 870 மீட்டர், அகலம் 12 மீட்டர், பாலத்தின்கீழ் இருபுறமும் 7 மீட்டர் அகலத்துக்கு அந்தந்தப் பகுதிகளுக்குச் செல்லக்கூடிய வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமியால் எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழாவில் திறக்கப்பட இருந்தன.

இதற்கிடையில் மேம்பாலத்தில் போடப்பட்டுள்ள சாலைகள் வெடிப்பு ஏற்பட்டு சரியும் நிலையில் இருந்ததால், பொதுமக்கள் பாலத்தைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கைவிடப்பட்டது. மேலும், பாலத்தின் மேல் பகுதியில் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டு அதுவும் பெரும் சர்ச்சையாக வெடித்தது. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிளவுபட்ட பகுதியைப் பார்வையிட்டார். அதன் பிறகு, அந்த இடத்தை அதிகாரிகள் சரி செய்தனர். ஆனால், இந்தப் பாலம் முறையாகவும் தரமாகவும் கட்டப்படவில்லை எனத் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. பாலத்தைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மேரீஸ் கார்னர் மக்கள் பயன்பாட்டுக் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி போராடியும் வந்தனர்.

அப்போது மேம்பாலாமா, மரண பாலமா எனச் சுவரொட்டிகள் ஒட்டி கோஷங்களும் போட்டனர். இதுபோல் பலமுறை போராட்டங்கள் நடக்கவே பாலம் திறப்பது கிடப்பில் போடப்பட்டது. பெரும் சர்ச்சைக்குரிய இந்தப் பாலத்தை இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.

இது குறித்து போராட்டக் குழுவிடம் பேசினோம். ''இன்று இந்தப் பாலத்தைத் திறப்பதற்காக நேற்றே ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. பாலம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. நாங்க என்னதான் நடக்குது எனப் பார்ப்போம் என அமைதியாக இருந்தோம். ஆனால், அதிகாலையில் போலீஸார் வீடு புகுந்து முனியாண்டி என்பவரைக் கைது செய்தனர். பழ.ராஜேந்திரன் என்பவரை வீட்டுக் காவலில் வைத்தனர். மேலும், சிலரை கைது செய்து அராஜகப் போக்கை போலீஸார் கடைப்பிடித்தனர்.

எதற்காக என்றால் முதல்வர் பாலத்தைத் திறக்கும்போது நாங்கள் போராட்டம் நடத்துவோம், கோஷம் போடுவோம் என்பதற்காக எங்களை ஒடுக்கி அவர்கள் நினைத்தது போலவே முதல்வர் பாலத்தைத் திறந்து வைத்தார். அப்போதும் சிலர் பாலம் திறப்பதற்கு எதிராகக் கோஷம் போட்டனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேருக்கு மேல் போலீஸார் கைது செய்து தெற்கு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அ.தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருகின்றனர். வாகனங்கள் போக்குவரத்தும் நடந்து வருகிறது. ஆனால், இந்தப் பாலம் முறையாகக் கட்டப்படவில்லை. ஆரம்பத்தில் போடப்பட்ட வரைபடத்தின்படி போட்ட திட்டத்தின்படி பாலம் கட்டவில்லை. மாறாக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தலையீட்டால் பெரும் முதலாளிகளைக் காப்பாற்றுவதற்காகப் பாலத்தின் நீளத்தின் அளவை குறைத்துக் கட்டியுள்ளனர்.

அதனால் நாஞ்சிக்கோட்டை சாலை வழியாக வரும் மக்கள் பாலத்தைக் கடப்பதற்கு பெரும் துயரத்துக்கு ஆளாக நேரிடும். மேலும் மேரீஸ் கார்னர் பகுதியில் பாலம் இறங்கும் இடத்தில் இரண்டு இடங்களில் வாகனங்களில் வருவார்கள். அவர்கள் எப்படிச் சாலையைக் கடப்பார்கள். அந்த நேரத்தில் மேலிருந்து  வேகமாக வரும் வாகனங்களை  உடனே  நிறுத்த முடியாது. இதனால் பெரும் விபத்துகளும் பெரும் சிக்கல்களும் ஏற்படும். அதனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்தப் பாலத்தைக் கட்டிவிட்டு திறந்துகொள்ளுங்கள் என்றோம் கேட்கவில்லை. அய்யா எடப்பாடி அவர்களே பாலத்தைத் திறந்துவிட்டீர்கள்; எந்த அசம்பாவிதம் நடந்தாலும் நீங்கள்தான் பொறுப்பு. கட்டிவிட்டீர்கள் என்பதற்காகத் திறந்தால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். ஒருமுறை நீங்கள் வந்து பாலத்தின் அமைப்பைப் பாருங்கள். அப்புறம் முடிவெடுங்கள். வழக்கம்போல் எதாவது நடந்தால் நிதி கொடுத்து சமாளித்துவிடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். ஏன் என்றால் இது மேம்பாலம் இல்லை மரண பாலம். அப்படிதான் கட்டியுள்ளது உங்கள் அரசு'' எனக் கொந்தளிப்புடன் கூறினர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!