வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (04/06/2018)

கடைசி தொடர்பு:18:40 (04/06/2018)

`துப்பாக்கியால் சுட்டவருக்கு விருது கொடுக்கணும்!' - பார்த்திபன் காட்டம்

விஜய் தொலைக்காட்சி சினிமா கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘விஜய் அவார்ட்ஸ்’ விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த விழா 10வது ஆண்டான இந்த வருடம் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டது. அதற்கான விழா கடந்த மே மாதம் 26-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடப்பதாக இருந்தது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் நடிகர் நடிகைகள் விழாவில் கலந்துகொள்ளத் தயங்கினர். இதனால், கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட அந்த விழா நேற்று (3.6.2018) அதே நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பார்த்திபன் விழா மேடையில்  ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றிப் பேசினார்.

பார்த்திபன்

அவர் பேசியதாவது, "விஜய் அவார்ட்ஸ் குழுவினருக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சிறந்த முறையில் துப்பாக்கியால் சுட்டவருக்கு விருது கொடுக்க  வேண்டும். பொதுமக்களுக்கு நடுவிலே ரொம்ப தூரம் தாண்டி வேன்மீது ஏறிநின்று கரெக்டாகக் குறிபார்த்து சுட்ட, உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களை வாயிலையே சுட்ட, வயிற்றுக்காகப் போராடியவர்களை வயிற்றிலேயே சுட்ட, ஈவு இரக்கமே இல்லாமல் இதயத்திலேயே சுட்ட அந்தத் துப்பாக்கிச் சுடுபவருக்கு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருது கொடுக்க வேண்டும். அந்த விருதை பாதிக்கப்பட்ட பொதுமக்களை வைத்தே கொடுக்க வேண்டும். இது எனது வேண்டுகோள். பிறகு, சமூக விரோதிகள் அனைவரையும் சுட்டுத்தள்ள வேண்டும். நான் பொதுமக்களைச் சொல்லவில்லை. சமூக விரோதிகளைச் சொல்கிறேன். இந்த மாதிரியான பெரிய மேடையில் நல்ல விஷயம் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன்" எனக் கூறினார்.