நீலகிரி கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைய இதுதான் காரணம்!

நீலகிரி மாவட்டத்தில் நடந்த கோடை விழாவுக்கான பார்வையாளர்கள் கடந்த ஆண்டை ஒப்பிடுகயில், 10 சதவீதம் வரை குறைவு என தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோடை விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி, குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி,  ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி என  கோடை விழா கொண்டாடப்படுகிறது.

நீலகிரி கோடை விழா

கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்களில் கடுமையான கட்டண உயர்வு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைய காரணமாக அமைந்தன. அதுபோல, கோடை விழாவின் அனைத்து கண்காட்சிகளும் ஏதோ ஒரு வகையில், அ.தி.மு.க., கட்சி நிகழ்ச்சியை போல அமைந்ததால், பாேக்குவரத்து நெரிசலுக்கு பயந்தும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு சுற்றுலா வருவதை தவிர்க்க காரணமானது.

இது குறித்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், ‛‛கோடை சீசன் சமயத்தில் இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்த கேரளா மற்றும் கர்நாடக வாகன ஓட்டுநர்களை குறிவைத்து போக்குவரத்து காவலர்கள்  அபராதம் விதித்துள்ளனர். இதனால் அங்கிருந்து சுற்றுலா வர, வாகன ஓட்டுநர்கள் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டது’’ என்றனர். 

சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது குறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறுகையில், ‛‛ ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 5 நாள்கள் நடந்த மலர்க் கண்காட்சியை சுமார் ஒன்றரை லட்சம், குன்னுார் பழக் கண்காட்சியை 20,000, கோத்தகிரி காய்கறிக் கண்காட்சியை 20,000, ஊட்டி ரோஜா கண்காட்சியை சுமார் 40,000 சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 10 சதவீதம் வரை குறைவு. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைய கர்நாடக தேர்தலும், ரம்ஜான் நோன்பு தொடங்கியதுமே காரணம்’’என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!