வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (04/06/2018)

கடைசி தொடர்பு:20:20 (04/06/2018)

ஏறுமுகத்தில் மோட்டார் சைக்கிள், கார் விற்பனை!

மே மாதத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது.

 பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி ஆகிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையால், இந்தியாவில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை சுணக்கம் கண்டது. அதன் பிறகு இந்த ஆண்டில் கடந்த 3 மாதங்களாக வாகனங்கள் விற்பனை படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மே மாதமும் வாகனங்கள் விற்பனை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.

பைக்

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சூசுகியின் உள்நாட்டு  கார்கள் விற்பனை கடந்த  மே மாதத்தில் 24 சதவிகிதம் அதிகரித்து 1,30, 248 கார்களிலிருந்து 1,61 497 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் சுவிஃப்ட், பாலினோ, டிசையர் ஆகிய கார்களின் விற்பனை  மட்டும் கடந்த மே மாதத்தில் 51, 234 யிலிருந்து 51, 234 ஆக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் பன்முக பயன்பாட்டு வாகனங்களின் விற்பனையும் 13 சதவிகிதம் உயர்ந்து, 22,608 யிலிருந்து 25,629 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், சிறிய ரக கார்களின் விற்பனை 3 சதவிகிதம் சரிந்து 39,089 யிலிருந்து 37864 ஆக குறைந்துள்ளது. 

செடன் சியாஸ் கார்களின் விற்பனை 15 சதவிகிதம் குறைந்து 4,724 யிலிருந்து 4,024 ஆக சரிந்துள்ளது. மாருதி நிறுவனம் கடந்த மே மாதத்தில் 1,703  இலகு ரக வர்த்தக பயன்பாட்டு வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் 428 ஆக இருந்தது. இதே மாதத்தில் மே மாதம் 9312 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு  மே மாதம் 6,286 ஆக இருந்தது. இதற்கிடையில் மாருதி நிறுவனம் 2 கோடி கார்களை தயாரித்து புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. நாட்டின் கார்களுக்கான சந்தையில் மாருதி 50 சதவிகித சந்தைப்பங்களிப்பை கொண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை கடந்த மே மாதத்தில்  58 சதவிகிதம் உயர்ந்து 54,295  வாகனங்களாக  அதிகரித்துள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் விற்பனை 7.14 சதவிகிதம் உயர்ந்து 45,008 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இதே போன்று, அசோக் லேலண்ட், மகிந்திரா & மகிந்திரா,ஹோண்டா ஆகியவற்றின் விற்பனையும் உயர்ந்துள்ளது.

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகனங்கள்  விற்பனை  மே மாதத்தில் 10 சதவிகிதம் அதிகரித்து 3,09, 865 வானகங்களாக உயர்ந்துள்ளது.  இதே மாதத்தில், மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 2,75, 426 யிலிருந்து 2,98, 135 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 2.4 அதிகரித்து 2,40,527 யிலிருந்து 2, 46, 231 ஆக உயர்ந்துள்ளது.

ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் கடந்த  மே மாதத்தில் 7, 06, 365 யை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்தை 11 சதவிகிதம் ( 6,33,884)  அதிகமாகும். தென் மேற்கு பருவ மழை சிறப்பாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நடப்பு ஆண்டின் மத்தியில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.