வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (04/06/2018)

கடைசி தொடர்பு:19:00 (04/06/2018)

`அந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியாது'- சென்னைப் பெண்ணைத் தேடி வந்த பெங்களூரு வாலிபர் 

சென்னை

திருப்பதியில் ஒன்றரை வயதுக் குழந்தையை பெங்களூரு வாலிபரிடம் ஒப்படைத்த சென்னைப் பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். 

பெற்ற குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டுச் செல்லும் சம்பவங்கள் நடப்பதுண்டு. ஆனால், திருப்பதியில் இளம்பெண் ஒருவர், ஒன்றரை வயது ஆண் குழந்தையை வாலிபர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு மாயமாகியுள்ளார். அந்தக் குழந்தையின் தாயைத் தேடி சம்பந்தப்பட்ட வாலிபர் சென்னை வந்துள்ளார். பிறகு திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்துள்ளார். 

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ``பெங்களூரு இந்திரா நகரைச் சேர்ந்தவர் நிதின். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்றுள்ளார். அப்போது. கைக்குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். நிதினிடம், அந்தப் பெண் தன்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி என்றும், சென்னைத் திருமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய குழந்தையின் சிகிச்சைக்காக திருப்பதிக்கு வந்ததாகவும், சென்னைக்குத் திரும்பிச் செல்ல பணமில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனால், அந்த இளம்பெண்மீது பரிதாபப்பட்டு உதவி செய்துள்ளார் நிதின். திருப்பதியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட பஸ்ஸில் நிதினும், கைக்குழந்தையுடன் அந்தப் பெண்ணும் ஏறினர்.

பிறகு நிதினிடம் அந்தப் பெண், கழிவறைக்குச் செல்கிறேன். குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். கழிவறைக்குச் சென்ற அந்தப் பெண் திரும்பி வரவில்லை. குழந்தையின் தாயைத் தேடி சென்னைக்கு வந்த நிதின், இளம்பெண் கூறிய தனியார் கம்பெனியின் முகவரியைத் தேடி கண்டுப்பிடித்து அங்கு சென்றார். ஆனால், அந்தக் கம்பெனியில் அவர் வேலைபார்க்கவில்லை என்று தெரிந்தது. இதையடுத்து, குழந்தையை எங்களிடம் நிதின் ஒப்படைத்துள்ளார். தற்போது, குழந்தைகள் நல அலுவலரிடம் நாங்கள் குழந்தையை ஒப்படைத்துள்ளோம். குழந்தையின் தாயைத் தேடி வருகிறோம்" என்றனர். 

போலீஸார் நடத்திய விசாரணையில் நிதின், ப்ளஸ் டூ வரை படித்துள்ளார். அடிக்கடி அவர் திருப்பதிக்குச் செல்வதுண்டு. சில நாளுக்கு முன்பு திருப்பதிக்குச் சென்றபோதுதான் பாத்திமா என்ற இளம்பெண்ணைக் கைக்குழந்தையுடன் சந்தித்துள்ளார் என்பது தெரியவந்தது. போலீஸாரிடம் நிதின், `கைக்குழந்தை, இளம்பெண்மீது பரிதாபப்பட்டு உதவி செய்ய முன்வந்தேன். ஆனால், அவரோ குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு மாயமாகிவிட்டார். அவரைத் தேடி சென்னைக்கு வந்தேன். பஸ்சில் கைக்குழந்தையுடன் நீண்ட நெடிய போராட்டத்தைச் சந்தித்தேன். நள்ளிரவில் குழந்தை அழுத போது சமாதானப்படுத்த முடியாமல் சிரமப்பட்டேன். அந்த இரவை என்னால் மறக்க முடியாது' என்று கூறியுள்ளார்.