`தி.மு.க. மீது முதல்வர் பழிபோடுவது இதற்காகத்தான்!’ - கொதிக்கும் கீதா ஜீவன் எம்.எல்.ஏ | DMK MLA Geetha Jeevan slams CM EPS over thoothukudi massacre

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (04/06/2018)

கடைசி தொடர்பு:21:02 (04/06/2018)

`தி.மு.க. மீது முதல்வர் பழிபோடுவது இதற்காகத்தான்!’ - கொதிக்கும் கீதா ஜீவன் எம்.எல்.ஏ

``தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குத் தன் மீது பழி விழக் கூடாது என்பதற்காகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க., மீதும் என் மீதும் வீண் பழி போடுகிறார்." எனத் தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ., கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

கீதா ஜீவன்

திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ., கீதாஜீவன் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ., கீதாஜீவன், ``தூத்துக்குடியில் கடந்த 22ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலக முற்றுக்கைப்போராட்டத்தை மக்கள் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு அறிவித்திருந்தனர். இதில் காவல்துறை சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன்?. மாவட்ட நிர்வாகமும் எதற்கும் தயாராகவில்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அலட்சியமே இத்துயரச் சம்பவத்துக்குக் காரணம். திடீரென ஏற்பட்ட கலவரத்தில், அப்பாவி மக்கள் 13 பேர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காவல்துறை முதல்வரின் துறைக்குக் கீழ்தான் உள்ளது. ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துத் தொலைக்காட்சியில்தான் தான் பார்த்துத் தெரிந்துகொண்டதாகச் சட்டமன்றத்தில் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிறார்.

மாநிலத்தின் முதல்வருக்கு ஒரு துப்பாக்கிச் சூடு நடந்தது பற்றி தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறினால் இதனை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. உளவுத்துறை தகவல் கொடுக்காமல் இருந்திருக்காது. இருப்பினும்,  முதல்வர் ஏன் இப்படியொரு பதிலைச் சொன்னார் எனத் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்து விட்டது என்பதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே முதல்வர் தி.மு.க., மீதும், தூத்துக்குடி தொகுதி  எம்.எல்.ஏ., என்பதால் என் மீதும் வீண் பழி போடுகிறார். தமிழகத்தில் நிர்வாகத் திறமையின்மையால்தான் இது போன்ற அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் இது போன்று 23 இடங்களில் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாகத் தமிழகத்தில் மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்கள் நடத்துவதற்கு அரசின் நிர்வாகச் சீர்கேடு மட்டும்தான் காரணம். ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதற்கு இந்தியா முழுவதும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவிகின்றனர். இச்சம்பவம் நடந்து 10 நாள்களுக்கு மேல் ஆகியும், இதுவரை நாட்டின் குடியரசுத் தலைவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.

வேதாந்தாவின் நிர்வாக இயக்குநர் அனில் அகர்வால், பிரதமர் மோடிக்கு நன்கு அறிமுகம் உள்ளவர்.
சிறுசிறு நிகழ்வுகளுக்குக் கூட ட்விட்டரில் கருத்துத் தெரிவிக்கும் பிரதமர் மோடியும் இதுவரையில் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை." என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க