வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (04/06/2018)

கடைசி தொடர்பு:21:40 (04/06/2018)

`சாலைப் பணிக்காக கோயிலைக் கையகப்படுத்துவதா?’ - ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்

நான்கு வழிச்சாலை பணிக்காக விநாயகர் கோயில் நிலத்தை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழுதூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 நான்கு வழிச்சாலை பணிக்காக விநாயகர் கோயில் நிலத்தை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழுதூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புகார் கொடுத்த மக்கள்


 ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பெரியபட்டினம் விலக்கு ரோட்டில் அருளொளி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அழகன்குளத்தில் ஆத்ம சாந்தி நிலையத்தை ஏற்படுத்தி ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு வந்த சித்திரமுத்து அடிகளால் இந்த ஆலயம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டு வழிபாட்டு ஆலயமாக விளங்கி வருகிறது. இங்கு முக்கிய விழா நாள்களில் வழுதூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அருளொளி விநாயகர் ஆலயத்துக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர். 

மேலும் இந்த ஆலய வளாகத்தினுள் அருளொளி விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகளை மேற்கொண்ட செந்தூரான்சுவாமிகளின் ஜீவசமாதியும் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் சங்கட சதூர்த்தி அன்று அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையின் 4 வழிச் சாலை பணிகளுக்காக வழுதூர் அருளொளி விநாயகர் ஆலயப் பகுதியினைக் கையகப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வழுதூர் கிராம மக்கள், 4 வழிச் சாலை பணிக்காகக் கோயில் அமைந்துள்ள நிலப்பகுதியினை எடுக்காமல் சாலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நிலப்பகுதியினைக் கையகப்படுத்தலாம் எனவும், ஆலயத்தினை நம்பியுள்ள கிராம மக்களின் வேண்டுகோளினை ஏற்க வேண்டும் எனக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.