கச்சநத்தம் கொடூரச் சம்பவம்தான்... ஆனால்? அச்சத்தில் ஆவாரங்காடு மக்கள்

கச்சநத்தம் கிராமத்தில் நடந்த சம்பவங்களுக்கும் ஆவாரங்காடு ஊர் மக்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை

``கச்சநத்தம் கிராமத்தில் நடந்த சம்பவங்களுக்கும் ஆவாரங்காடு ஊர் மக்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் என்பது நன்கு தெரிந்த பின்பும், ஊரிலுள்ள அப்பாவிகள்மீது வழக்கு போட்டுவருகிறது காவல்துறை'' என்று ஆவாரங்காடு மக்கள் சார்பாக வழக்கறிஞர் கார்த்திக்ராஜா என்பவர், இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 

கார்த்திக்ராஜா

மேலும் அவர் கூறும்போது, ``கச்சநத்தம் கிராமத்தில் நடந்த கொடூரமான சம்பவத்தையும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தே இல்லை. அதேநேரம், ஆவாராங்காட்டில் குறிப்பிட்ட சாதியினர் வெறியர்கள் போலவும், எப்பொழுதும் அப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது  வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது போலவும், கச்சநத்தம் கிராமத்தை ஆவாரங்காடு ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தாக்குதல் நடத்தியது போன்ற தோற்றத்தை சில அரசியல் தலைவர்களும் இயக்குநர்களும் உருவாக்கி வருகிறார்கள்.

இதுபோன்ற அழுத்தங்களால் காவல்துறையும் ஊரிலுள்ள அப்பாவிகள்மீது வழக்கு போட்டுள்ளனர். அந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பதை ஊர் மக்கள் தெரிவித்த பின்பும், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் இன்னும் பல அப்பாவிகளை வழக்கில் சேர்ப்பார்களோ என்ற அச்சம் உள்ளது. சில அரசியல் தலைவர்கள் தலைமையில், உயிரிழந்தவர்களின் உடல்களை ஊருக்கு எடுத்து வந்தபோது நடந்தவற்றை காவல்துறை அறியும். எனவே, அப்பாவிகள்மீது போட்டப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். இறுதி ஊர்வலத்தில் அத்துமீறி நடந்துகொண்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!