`தமிழக உரிமையைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார்'- கமலுக்கு எதிராக பி.ஆர்.பாண்டியன் திடீர் சீற்றம்

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை

மக்கள் நீதி மய்யத்தில் தலைவர் கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை காவிரி பிரச்னை சம்பந்தமாக சந்தித்ததாகக் கூறியுள்ளது தமிழக அரசியல் தளத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. கமல்ஹாசன் அரசியல் இயக்கம் தொடங்குவதற்கு முன்பிருந்து இப்போதுவரை அவருடன் நெருக்கமாக இருந்துவரும் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், குமாரசாமியுடனான கமலின் சந்திப்பைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

பிஆர் பாண்டியன்

``கமல், குமாரசாமி சந்தித்துக் காவிரி பிரச்னையை இரு மாநில மக்களும் பேசி தீர்த்துக்கொள்வோம் என்று கூறியது தமிழக உரிமையைக் குழி தோண்டிப் புதைப்பதாகும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்து மத்திய அரசு காலம் கடந்து அரசிதழில் வெளியிட்ட நிலையில், அதற்கு நிரந்தரத் தலைவர், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் ஆணையம் அமைப்பதில் மத்திய நீர்வள ஆணையம் மெத்தனமாகச் செயல்பட்டு வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழகத்துக்குக் கொடுக்கமாட்டேன் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டவர் கர்நாடக முதல்வர் குமாரசாமி. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அமைதி காத்து வருகிறார்.

இந்நிலையில் கமலும், குமாரசாமியும் இணைந்து தீர்ப்பை முடக்கும் வகையில், பேச்சுவார்த்தை நடத்துவோம் என்ற கருத்தை வெளியிட்டு காவிரி பிரச்னையைத் திசை திருப்புவது தமிழக நலனுக்கு எதிரானதாகும். சட்டப் போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கமல் சந்திப்பால் 40 ஆண்டு காலம் போராடிப் பெற்ற சட்ட அங்கீகாரம் பறிபோகும் சூழல் உருவாக்கிவிட்டது. தனது திரைப்படத்துக்குக் கர்நாடகாவில் தடை ஏற்படுமோ என்ற அச்சத்தில் காவிரி உரிமையை பழி கொடுத்து விடக் கூடாது. இந்நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற குமாரசாமி மறுத்தால், நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகி அவர் ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து அமைதியாக இருந்து வந்தார். தற்போது கமல் அவரைச் சந்தித்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்த குமாரசாமிக்கு வாய்ப்பளித்துள்ளார். கமல் காவிரி பிரச்னைக்குத் தீர்வு காண விரும்பியிருந்தால் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, வலியுறுத்தியிருக்கலாம். தமிழக அரசு மேலாண்மை ஆணையம் அமைத்து ஜூன் 12ல் மேட்டூர் அணை திறந்து இவ்வாண்டு குறுவை சாகுபடியை மேற்கொள்ளலாம் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ள நிலையில் கமல்ஹாசனின் துரோகச் சுயநல நடவடிக்கை மன்னிக்க முடியாத செயல் என எச்சரிக்கிறேன்.'' என்று தெரிவித்துள்ளார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!