வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (04/06/2018)

கடைசி தொடர்பு:19:09 (04/06/2018)

நண்பனைக் கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட வாலிபர் - சென்னை ரிச்சித்தெருவில் நடந்த ஓரினச்சேர்க்கை பயங்கரம் 

 கொலை

ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்து நண்பனைக் கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சித் தெரு அருகில் உள்ள நரசிங்கபுரம் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன், பிரபு. இவர்கள் இருவரும் ரிச்சித் தெருவில் வேலைபார்த்து வந்தனர். இருவரும் நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள குடோனில் தங்கினர். இந்நிலையில் இன்று காலையில் குடோனை சுத்தம் செய்ய வந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். குடோனில் பிரபு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அவரின் அருகில் சரவணன் துாக்கில் தொங்கியபடி கிடந்தார். இதையடுத்து, குடோன் உரிமையாளர் விமல்ஜாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அவர், சிந்தாதிரிப்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பிரபுவும் சரவணனும் சிறுவயது முதல் நண்பர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்தனர். குடோனில் தனியாகச் சரவணன் தங்கியிருக்கும்போது பிரபு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. குடோனில் சரவணன் தனியாக இருந்தபோது அங்கு வந்த பிரபு, அவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு சரணவன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் அங்கு கிடந்த கத்தியை எடுத்து பிரபுவை சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீஸிடம் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் சரவணன் அங்கேயே தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்" என்றனர்.

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் ரிச்சித்தெருவில் நடந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.