வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (04/06/2018)

கடைசி தொடர்பு:18:40 (04/06/2018)

`ஆர்வக்கோளாறு ஆபத்தை ஏற்படுத்தும்’ - கமலுக்கு ராமதாஸ் அட்வைஸ்

குமாரசாமி - கமல் சந்திப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கமல்
 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், கர்நாடக முதல்வர் குமாரசாமியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கமல், “குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட வந்தேன். இந்தச் சந்திப்பு கூட்டணிக்கானதோ திரைப்படம் தொடர்பானதோ இல்லை முற்றிலும் மக்களுக்கானது” என்றார். 

கமலின் இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் இருவேறான விமர்சனங்கள் எழுந்துள்ளன. `காவிரி விவகாரம் குறித்து கமல் கர்நாடக முதல்வரைச் சந்தித்துப் பேசியது வரவேற்கத்தக்கது’ என்று ஒரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். `கமல் விளம்பரத்துக்காகவே இவ்வாறு செய்கிறார்’ என்று மற்றொரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

கமல்
 

கமல் - குமாரசாமி சந்திப்பு குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், ``கர்நாடக முதல்வரை கமல்ஹாசன் இன்று சந்தித்து காவிரி சிக்கல் குறித்து பேச்சு நடத்துகிறார். காவிரி சிக்கலில் பேச்சு கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆர்வக்கோளாறில் செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்திவிடும்” எனத் குறிப்பிட்டுள்ளார்.

கமல்
 

இந்நிலையில், கமல் உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, ``கமலை சந்தித்ததில் மகிழ்ச்சி. தமிழ்நாடு - கர்நாடகா இடையே பரஸ்பர பிணைப்பை மேம்படுத்துவதை நோக்கிப் பயணிக்க முடிவு செய்துள்ளோம். காவிரி பிரச்னை உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்படும். இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு பாலமாகக் கமல் செயல்பட வேண்டும் என்று அவரிடம் நான் கேட்டுக்கொண்டேன். என் கோரிக்கையை அவர் அன்பாக ஏற்றுக்கொண்டார்” என்று பதிவிட்டுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க