வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (05/06/2018)

கடைசி தொடர்பு:16:45 (05/06/2018)

போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர துப்பாக்கிச் சூடு மட்டுமே தீர்வாகுமா?

துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் என்று ஆரம்பித்து, பின்னர் அதுவே 20 லட்ச ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.   தேசிய மனித உரிமை ஆணையம், கள ஆய்வுக்காக 2018, ஜூன் 2-ம் தேதி (இன்று) காலை, தூத்துக்குடி வந்துள்ளது... இனி அவர்கள் தரும் விசாரணை அறிக்கை, கோர்ட்டில் தமிழக அரசு அளிக்கும் பதில், 13 பேர் கொல்லப் பட்டது குறித்து, ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேட்டுள்ள கேள்விக்கு, அரசு தயாரித்து அளிக்கப் போகும் பதில்,  பாதிக்கப் பட்டவர்கள் தரப்பில் போடப்படும் வழக்குகள் என்று ஓரிரு ஆண்டுகள், ரத்தமும்-குண்டுகளின் நினைவுமாக நகர்ந்து, நகர்ந்து பின் எல்லாமும் மறைந்து போகும்...

'போராட்டம் வெற்றி பெற்றால்தான் வாழ்க்கை' என்று வீதிக்குவந்த மக்கள், சாலையிலேயே பிணமாகி இருக்கிறார்கள். மக்களின் போராட்டத்தைக் குண்டுகளால் முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள், `நாங்கள் கற்களால் தாக்கப்பட்டதால்தான் துப்பாக்கிக் குண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தோம்' என்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே ஆயிரக்கணக்கான போலீஸார், சமூக வலைதளங்களில் தங்கள் கணக்கைத் தொடங்கி, ஊடகங்களுக்கும், நெட்டிசன்களுக்கும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது முன்னெப்போதும் இல்லாத புதுவிதமான தாக்குதலாகும். `டிசிப்ளின் ஃபோர்ஸ்' என்று சொல்லிக் கொள்ளும் காவல்துறை தலைமை, இந்த ஃபோர்ஸை அளவு கடந்து ஊக்குவிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. இது அபாயமா, உபாயமா என்பதற்கான விடையைத் தேட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. 

போராட்டம்

ஸ்டெர்லைட் வந்த விதம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் அமையவிருந்த, `வேதாந்தா' குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு, மக்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் 1.5.1994 அன்று அம்மாநில அரசு, ஸ்டெர்லைட்டுக்குத் தடை விதித்தது. அங்கிருந்து கிளம்பிய வேதாந்தா குழுமம், அடுத்து தமிழகத்தில்தான் நுழைந்தது. தென் மாவட்டமான தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்கிக்கொள்ள, ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழக அரசு, 1.8.1994-ல் அனுமதி வழங்கியது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஆலைக்குத் தடையில்லா சான்று வழங்கியது. மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இந்த ஆலைக்கு 16.1.1995-ல் ஒப்புதல் வழங்கியது. கேரளா, கர்நாடகா, ஒடிசா, கோவா போன்ற மாநிலங்களிலிருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்குத் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 

ஸ்டெர்லைட் சந்தித்த முதல் சிக்கல்!

ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, அடுத்தடுத்த நகர்வுகளில், பல பிரச்னைகளை எதிர்கொண்டது. 'ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி சுற்றுச்சூழலைக் கருத்தில் கொள்ளாமல் ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிறது. இதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து' என்ற குற்றச்சாட்டுதான் முதலில் எழுந்தது. தடையில்லா சான்று கொடுத்தவர்களோடு, மக்கள் மல்லுக்கு நின்றனர். விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. `பாதுகாப்பு அம்சங்களை முறையாகக் கடைப்பிடித்து ஆலையை நடத்தலாம்' என்று நீதிமன்றம் சொன்னது. `அப்படியே ஆகட்டும் ஐயா' என்று  ஸ்டெர்லைட் நிர்வாகம் அப்போதைக்குத் தலையை ஆட்டிவிட்டு மீண்டும் மக்களைக் கதறவிட்டது. மக்கள் போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.                        

போராட்டம் வித்திட்ட ஸ்டெர்லைட் ஆலை

வைகோவும், கம்யூனிஸ்ட்டுகளும்...!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தனித்தனியே போராடிய மக்களைப் போலீஸார் கைதுசெய்ய ஆரம்பித்தனர். `ஊருக்குப் பத்துப் பேர் மீது எஃப்.ஐ.ஆர்' என்று ஆரம்பித்து குடும்பத்தில் ஒருவர் மீது எஃப்.ஐ.ஆர். என்றளவுக்கு வீட்டுக்குவீடு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினர். தனித்தனியாக, குடும்பங் குடும்பமாகப் போராடிய மக்களுக்கு நேர்ந்த கதியைப் பார்த்த இடதுசாரிகள், போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர், நீதிமன்றத்தை மக்கள் நாடினர். அடுத்து களம் இறங்கிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பசுமைத் தீர்ப்பாயம் முதல் பார்லிமென்ட்வரை கொண்டுபோனார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்றாலே வைகோ என்று சொல்லும் அளவுக்கு, அந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தின் அம்பாஸிடராகவே வைகோ மாறிப் போனார். டெல்லி ஐகோர்ட்டில் மட்டுமே இதற்காக முப்பது முறை, நேரில் ஆஜராகி வைகோ வாதாடினார். 

ஸ்டெர்லைட்டை விரட்டிய ஒடிசா

ஒடிசா மாநில மலைவாழ் பழங்குடியின மக்கள் மத்தியில் 2013- ம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று, ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அது, யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்ற `பேலட் பாக்ஸ்' வாக்கெடுப்பு அல்ல. ஒடிசாவின் `நியாம்கரி' மலைப்பகுதியில் `பாக்ஸைட் தாது' க்களை வெட்டியெடுத்து அங்கு சுரங்கம் அமைக்கலாமா, வேண்டாமா என்பதே அந்தத் திடீர் வாக்கெடுப்பின் பின்னணி. ஒட்டுமொத்த மக்களும், `வேண்டாம்' என்ற ஒற்றை வார்த்தையையே தங்களின் வாக்குகளாக அளித்தனர். கருத்து கேட்டது, மெத்தப் படித்த அரசு அதிகாரிகள். வாக்களித்ததோ, கல்வியறிவற்ற மலைவாழ் பழங்குடியின மக்கள். அதிகாரிகளைவிட மெத்தப் படித்த மக்கள் வாழும் ஊரான தமிழகத்தில் வாக்கெடுப்புகள் ஏதும் நடக்கவில்லை. மொத்தமாகக் கூடிப் பேசினார்கள், வரவு-செலவு கணக்குகளைப் போட்டார்கள். நச்சுக்காற்றை மக்கள் சுவாசிக்க நாட்டாமை போல் தீர்ப்பெழுதிச் சென்றார்கள். இதுதான் இங்கே நடந்திருக்கிறது. மக்களிடம் கேட்டால், மறுப்புதான் வரும் என்பதை, அரசு சக்திகள் புரிந்து வைத்திருந்தன. ஒடிசாவில் மட்டும் ஏன் மக்கள் கருத்தினைக் கேட்டார்கள் என்றால், அங்கே மக்களுக்கான அரசு ஆட்சி நடத்துகிறது. அதனால், கருத்தைக் கேட்டார்கள், அவ்வளவுதான்.

ஸ்டெர்லைட் கோபத்தில் வைகோ

கோர்ட் உத்தரவும், மக்கள் தீர்ப்பும்!

வேதாந்தா குழுமத்தினர் 250 சதுர கிலோ மீட்டர் பரப்பில் சுரங்கம் அமைத்துக் கொள்ளவும், அங்கிருந்து பாக்ஸைட் தாதுவைத் தனியே பிரித்தெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் லாஞ்சிகரிலும் அமைத்துக் கொள்ள ஒடிசா அரசு, வழிசெய்து விட்டது. இவ்வளவும் அரசின் அறிவுக்கேற்ப, வருமானத்திற்கேற்ப நடந்து முடிந்துவிட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், `இந்த இடத்தில் சுரங்கமும், ஆலையும் அமைப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை' என்று அவர்கள் பங்குக்குத் தடையில்லா சான்றும் கொடுத்து விட்டனர். இதன் பின்னர்தான், மலைவாழ் பழங்குடியின மக்களின் போராட்டமே ஆரம்பித்தது. அப்போதுதான் உச்ச நீதிமன்றம் உள்ளே வந்தது, 'மக்கள் தீர்ப்புப்படி, (கருத்துதானே தீர்ப்பு) முடிவெடுங்கள்' என்று மாநில அரசுக்கு ஆணை பிறப்பித்தது.

அந்தநாள், அந்த மக்களின் வாழ்க்கையில் பொன்னாள். மொத்தம் 112 கிராமங்கள். ஆலை அமைய திட்டமிடப்பட்டிருந்த ஒன்றரைக் கிலோ மீட்டர் சுற்றளவில் 12 கிராமங்கள் இருந்தன. வாக்களிக்க 12 கிராம மக்களும் அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர்கள், மாவட்ட போலீஸ் எஸ்.பி, உள்ளூர் டி.எஸ்.பி., வனத்துறை அதிகாரிகள் என வாக்கெடுப்பு மையம், அதிகாரங்களால் சூழப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அந்த மக்கள் அனைவரும் சுரங்கமும், ஆலையும் இங்கே அமையக் கூடாதென வாக்களித்தனர். அன்று மட்டும் ஒடிசா மக்கள்  அப்படியொரு வாக்கை அளிக்காமல் போயிருந்தால், ஒடிசா மாநிலத்தை ஒண்டிப்புலி போல இந்தியாவிலிருந்து தனித்துச் சுற்ற விட்டிருப்பார்கள். ஏனெனில், நாட்டின் அதிகக் கனிமவளம் கொண்ட மாநிலங்களில் முதல் ஐந்து இடத்தில் ஒடிசா இருக்கிறது. அதேபோல் நாட்டின் பாக்ஸைட் கனிமமும் 50 சதவிகிதம் இங்குதான் உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவிய `வேதாந்தா' குழுமம் போலவே, கொரியாவின் 'போஸ்கோ' ஆலை நிறுவனமும், 'லட்சுமி மிட்டல்' நிறுவனத்தின் 'ஆர்சிலர்' நிறுவனமும் ஒடிசாவில் காலூன்ற முடியாமல் விரட்டியடிக்கப்பட்ட நிறுவனங்களே.

தூத்துக்குடியில் அமைதிக்கான ஆலோசனை

வேதாந்தாவும், மாநில அரசும்!

பீஹார் மாநிலத்தில் பழைய இரும்பு, செம்பு, ஈயம், பித்தளை மற்றும் அலுமினியப் பாத்திரங்களை வாங்கி விற்கும் ஒருநபர் நிறுவனமாக, வர்த்தக உலகில் நுழைந்தவர், அனில் அகர்வால். இன்று நாட்டின் முக்கியத் தொழிற்சாலைகளின் நிறுவனராகவும், `வேதாந்தா' குழுமத் தலைவராகவும் தன்னை இவர், வளர்த்தெடுத்துக் கொண்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அரசு நிறுவனங்களான, `பால்கோ, நால்கோ, மால்கோ' உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு இவர்தான் இப்போது முதலாளி. வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் திறமையான வர்த்தகர். நிறுவனம் சார்ந்த சுயசார்பு வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொள்ளக் கூடிய, `வணிக' அறிவோடு இருப்பவர். `பழைய' பொருள்களை வாங்கும் தொழிலில் வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு இன்று, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் லண்டன் மாநகரில் நிறுவனத்தின் பிரதான கிளை இருக்கிறது. 

தொழில் வளர்ச்சி, வர்த்தக முதலீடு, வேலை வாய்ப்பு என்ற பெரு நிறுவனங்களின் உத்தரவாதம் மக்கள் நலனைச் சீரழிக்கிறதா, உயர்த்துகிறதா என்ற உள்ளுணர்வுடன் ஆராய்ந்து அதைச் செயலாக்கத்துக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு நாட்டை ஆள்பவர் கைகளில்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. `வீட்டை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நாட்டை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்' என்றுதான் மக்கள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வாக்களிப்பதும் நடக்கிறது. ஆள்பவர்கள் மக்களைச் சரியாகப் பார்த்துக் கொண்டார்களா என்றால், இல்லை என்பதைத்தான் பதிலாகச் சொல்லியாக வேண்டிய நிலை இப்போது உள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம்

13 உயிர்களைப் பலி கொடுத்து வெற்றி!

நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மண்ணான குஜராத், வேதாந்தா குழுமத்தின் `ஸ்டெர்லைட்- தாமிர உருக்காலைக்கு' இடம் கொடுக்கவில்லை. கோவா மாநிலமும், `முடியவே முடியாது' என்று மறுத்துவிட்டது. கர்நாடகாவிலும் போய் முட்டிப் பார்த்தது வேதாந்தா நிறுவனம், ஒன்றும் நடக்கவில்லை. `ஒரு மரத்தை வெட்டினால் நூறு மரத்தை நட்டு விட்டுப் போ' என்று இயற்கையைக் காக்க மக்களிடம் கண்டிப்புக் காட்டும் கேரளா பக்கமும், வேதாந்தா குழுமம் போய்ப் பார்த்தது, அங்கும் காரியம் ஆகவில்லை. மகாராஷ்டிர அரசு மட்டும், வேதாந்தா நிறுவனம், `தாமிர உருக்காலை' அமைத்துக்கொள்ள அனுமதி கொடுத்தது, 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தொடங்கப்பட்டு, முழுவீச்சில் போய்க்கொண்டிருந்தது. `இரண்டு மாநில மக்களால், ஆபத்து என்று நிராகரிக்கப்பட்ட ஆலையால், நமக்கு மட்டும் நன்மை விளையுமா என்ன?'  என்ற அறிவார்ந்த கேள்வியே, மக்கள் போராட்டமாக மாறியது. மக்களின் போராட்டத்தைப் பார்த்த அரசு மிரண்டு போனது. வேதாந்தா குழுமத்தை வெளியேறும்படி கும்பிட்டுக் கேட்டுக் கொண்டது. தமிழகத்தின் தூத்துக்குடியில், மக்கள்தான் வேதாந்தா குழுமத்தைப் பார்த்தும், மாநிலத்தை ஆள்பவர்களைப் பார்த்தும் கடந்த 23 ஆண்டுகளாகக் கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தது என்பது போல 23 ஆண்டுகள் கும்பிட்டும், கெஞ்சியும், கதறியும் துடித்த மக்களுக்கு 13 உயிர்களைப் பலி கொடுத்த பின் நியாயம் கிடைத்திருக்கிறது. இப்படியொரு நியாயத்தைப் பெற, தூத்துக்குடி மக்கள் கொடுத்த விலைதான் அதிகம்.     

 போலீஸ் குண்டுகளுக்குப் பலியான உயிர்கள்                       

முடிவுக்கு வந்த போராட்டம்!

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பதே வாடிக்கையாகிப் போனது. பிப்ரவரி 2, 2018 அன்று, இந்த ஆண்டின் எழுச்சிப் போராட்டம் தொடங்கியது. பிப்ரவரி 13 அன்று போராட்டம் உச்சம் தொட்டது. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மக்களைப் போலீஸார் கைது செய்தனர். பிப்ரவரி 17- ம் தேதி, ஆலைக்கு எதிராகப் பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்த மக்கள் வழக்கு போட்டனர்.  மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதற்கு அனுமதி கொடுத்தது. மக்கள் போராட்டத்துக்கு 2018, மார்ச் 24- ம் தேதி, வணிக அமைப்புகள் ஆதரவு கொடுத்தன. மார்ச், 26- ம் தேதி பராமரிப்புப் பணிகளுக்காக ஆலையை மூடுகிறோம் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்தது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 21- ம் தேதி 144 தடை உத்தரவை, மாவட்ட  ஆட்சியர் பிறப்பித்தார். 

ஆட்சியரின் உத்தரவுக்கு அடுத்த நாளான மே 22 அன்று மாவட்டத்தின்  குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டத்தின் நூறாவது நாள். மே 22-ம் தேதியன்றுதான் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் திரளாகச் சென்றனர், மக்கள்மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஜம்மு-காஷ்மீரைக் கண்முன் கொண்டு வந்ததுபோல், தூத்துக்குடி நகரின் தரைப்பகுதி ரத்தங்களாலும், வான் பகுதி புகைமூட்டத்தாலும் நிரம்பியது. போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. போராட்டம் வன்முறையாக வெடிக்க, `நாசகார சக்திகள்' பின்னணியில் இருந்ததாக அரசுத்தரப்பில் சொல்லப்பட்டது. போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான அரசு வாகனங்கள் தீயில் கருகின. ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் பணிபுரிவோரின் குடியிருப்புகளும் தீக்கிரையாகின. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் என்று ஆரம்பித்து, பின்னர் அதுவே 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், கள ஆய்வுக்காக தூத்துக்குடி சென்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அவர்கள் தரும் விசாரணை அறிக்கை, கோர்ட்டில் தமிழக அரசு அளிக்கும் பதில், 13 பேர் கொல்லப்பட்டது குறித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கேட்டுள்ள கேள்விக்கு, அரசு தயாரித்து அளிக்கப் போகும் பதில், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் போடப்படும் வழக்குகள் என்று ஓரிரு ஆண்டுகள், ரத்தமும் - குண்டுகளின் நினைவுமாக நகர்ந்து, பின் எல்லாமும் ஒட்டுமொத்தமாக மறைந்து போகும். அடுத்த முறை, இதுபோன்ற போராட்டங்களை விரைந்து முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு, 'ஏ.கே. 47 ரக துப்பாக்கியை மட்டும் பயன்படுத்தி விடாதீர்கள்' என்று மட்டுமே வேண்டுகோளாய் வைக்கத் தோன்றுகிறது.


டிரெண்டிங் @ விகடன்