வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (04/06/2018)

கடைசி தொடர்பு:22:40 (04/06/2018)

‘வாழவே பிடிக்கலை; எங்களை கருணைக்கொலை செஞ்சிடுங்க’ - கலெக்டரிடம் கதறிய திருநங்கைகள்!

கொலை

ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓவியா, அனு. திருநங்கைகளான இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்தப் புகார் மனுவில், ‘என்னுடைய தம்பியிடம் இருந்து பறிமுதல் செய்த பைக்கை கேட்பதற்காக சித்தோடு காவல் நிலையத்திற்குச் சென்றோம். பணம் கொடுத்தால் பைக்கை தருகிறோம் என போலீஸார் கூறினர். நாங்கள் பணம் இல்லையென்றதும் எங்களை மனது புண்படும்படி தகாத வார்த்தைகளால் பேசிய போலீஸ் எஸ்.ஐ, அடிக்காத குறையாய் ஸ்டேஷனிலிருந்து வெளியே விரட்டினார்.  எனவே, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென’ குறிப்பிட்டிருந்தார். புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்ததும் திருநங்கை ஓவியா பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். போலீஸார் அதனை தடுத்து நிறுத்தி, திருநங்கைகள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அனுப்பினர். போலீஸாரின் வார்த்தைகளை தாங்க முடியாததால் தான் தீக்குளித்ததாக திருநங்கை ஓவியா கதறியழுதார்.

கொலை

இதற்கிடையே கடந்த மே 28-ம் தேதி இதே திருநங்கைகள் ஈரோடு முனியப்பன் கோவில் அருகே இரவு நேரத்தில் பைக்கில் வந்திருக்கிறார்கள். அப்போது, அந்தப்பகுதியில் நின்றிருந்த 4 ஆண்கள், திருநங்கைகளை தாக்கி அவர்களிடமிருந்த பணம் மற்றும் செல்போனை திருடிவிட்டுச் சென்றிருக்கின்றனர். இதுசம்பந்தமாக ஈரோடு, வீரப்பன் சத்திரம் காவல் நிலையத்தில் திருநங்கைகள்  புகார் கொடுத்திருக்கின்றனர். புகாரின் பேரில் அந்த நபர்களை ஆரம்பத்தில்அழைத்து விசாரணை நடத்திய போலீஸார், பின்னர் விடுவித்திருக்கின்றனர். இதுசம்பந்தமாக, போலீஸாரிடம் திருநங்கைகளான ஓவியா மற்றும் அனு கேள்வி கேட்க, வீரப்பன் சத்திரம் போலீஸார் வார்த்தைகளாலேயே திருநங்கைகளை வதைத்திருக்கிறார்.

கொலை

அதனையடுத்து, இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த திருநங்கைகள் இருவரும், ‘போலீஸார் தொடர்ந்து எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குறாங்க. எங்களுக்கு வாழப் பிடிக்கலை, எங்களை கருணைக் கொலை செஞ்சிடுங்க’ என கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.  

கொலை

இதுகுறித்து திருநங்கை ஓவியா மற்றும் அனுவிடம் பேசினோம். “ஒரு போலீஸ் எஸ்.ஐ எங்க மனசு கஷ்டப்படுற மாதிரி அசிங்க அசிங்கமா பேசிட்டாருங்கிற காரணத்துக்காகத் தான் எஸ்.பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தோம். அதுக்கு எங்க மேல போலீஸ் வழக்கு போட்டு, கோர்ட்டு கேஸூன்னு அலைய விட்டு மன உளைச்சல் செய்யுறாங்க. சமீபத்துல எங்களோட செல்போன் மற்றும் பணத்தை ஒரு கும்பல் பறிச்சிட்டு போயிட்டாங்கன்னு ஆட்களின் பெயர்களோடு புகார் கொடுத்தோம். போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. ‘நீங்களும் தான் இந்த மாதிரியான திருட்டு வேலை செய்யுறீங்க. ஒழுங்கா ஸ்டேஷனை விட்டு வெளிய போயிடு. இல்லைனா குண்டர் சட்டத்துல தூக்கி உள்ள போட்டுடுவேன்னு மிரட்டுறாங்க’ என போலீஸார் மிரட்டுகின்றனர். ஸ்டேஷனுக்கு போனா, ‘ச்சீய்... வெளியே போ’ என துரத்துகிறாகள். நாங்க என்ன நாயா சார்!... திருநங்கைகளை இழிவுபடுத்துறாங்க. நாங்க எவ்ளோ வலியைத் தாங்கிக்கிட்டு ஆப்ரேஷன் செஞ்சு முழு பெண்ணாக இருக்கோம். ஆனா, இவங்க எங்களை மனுச ஜென்மமாக மதிக்காம, மேலும் மனசை புண்படுத்துற மாதிரி கேவலமாக பேசுறாங்க. இதெல்லாம் கேக்குறப்ப மனசு வலிக்குது. வாழவே புடிக்கலை. எங்களை தயவு செஞ்சு கருணைக் கொலை செஞ்சு கொன்னுடச் சொல்லிடுங்க” என கண்ணீர் வடித்தனர். இந்தப் புகார் மனுவைப் பெற்ற கலெக்டர், என்னவென்று விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என ஈரோடு எஸ்.பிக்கு உத்தரவிட்டிருக்கிறார்.