வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (04/06/2018)

கடைசி தொடர்பு:22:20 (04/06/2018)

‘வெளிய இருந்து வேணுமுன்னா சாமியை கும்புட்டுக்க’ - பெரியார் மண்ணில் நடக்கும் பெருங்கொடுமை!

சாமி

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அது. ஹைதராபாத் நகரின் சில்குர் பகுதியில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலில், கோவில் அர்ச்சகரான ரங்கராஜன் என்பவர், ஆதித்யா பரஸ்ரி என்ற பட்டியலின பக்தரைத் தோளில் சுமந்து, மேள தாளங்களுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். அர்ச்சகரின் இந்த செயலைக் கண்டு சாதி மறுப்பாளர்கள் பலரும் நெகிழ்ந்து போயினர்.

ஆனால், சமூக சீர்திருத்தம் மற்றும் சாதி வேற்றுமைக்காக கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாகவே போராடி வரும் தமிழகத்தில், இந்த சாதியப் பாகுபாடு இன்னும் தீர்ந்தபாடில்லை. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலை, ஓரளவிற்கு குறைந்துள்ள வேளையில், சாதி வேற்றுமைகளை களைய மிகவும் பாடுபட்ட பெரியாரின் சொந்த மண்ணான ஈரோட்டில் அந்த அவலம் தொடர்ந்து அரங்கேறி வருவது வேதனையாக இருக்கிறது.

சாதி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது, ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த வீரகோபால் என்பவர் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்களை வழிபட அனுமதி மறுக்கின்றனர்’ என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து அவரிடம் பேசினோம். “ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள ‘அரச்சலூர் அரச்சாலையம்மன் வகையறா திருக்கோவில்’ மற்றும் கொடுமுடி தாலுகாவில் உள்ள ‘கந்தசாமிபாளையம் சடையப்பசாமி திருக்கோவில்’ ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால், இந்த கோவில்கள் அனைத்தும் அங்குள்ள உள்ளூர் முக்கியப் பிரமுகர்களின் மேற்பார்வையில் தான் இயங்கிவருகின்றன. அவர்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததிய இன மக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கின்றனர். ‘நீங்க மாட்டுக்கறி சாப்புடுறீங்க, தீண்டத்தகாதவங்க, கோவில் வாசல்ல இருந்து வேணும்னா சாமி கும்பிட்டுக்குங்க’ என்கின்றனர். ஆனால், திருவிழாக் காலங்களில் அருந்ததிய இன மக்கள் கொடுக்கும் நன்கொடைகளை மட்டும் ஏற்றுக்கொள்கிறார்கள். இது என்ன நியாயம்?. சாமியை கும்புட கூட ஜாதி பாத்தா என்னங்க சார்... மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து அருந்ததிய மக்கள் கோவிலுக்குள் நுழைந்து கடவுளை வழிபட அனுமதி மற்றும் பாதுகாப்பினை வழங்க வேண்டும்’ என்றார்.