வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (04/06/2018)

கடைசி தொடர்பு:08:11 (05/06/2018)

1409 சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்து சென்னை அரசு மருத்துவமனை சாதனை!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதுவரை 1409 பேருக்குச் சிறுநீரக மாற்று அறுவைசிசிச்சை!

``ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதுவரை 1409 பேருக்கு வெற்றிகரமாகச் சிறுநீரக மாற்று அறுவைச் சிசிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது" என்று மருத்துவமனையின் சிறுநீரக அறுவைச் சிகிச்சை துறை இயக்குநரும் பேராசிரியருமான கோவிந்தராஜ் கூறினார்.

சிறுநீரக மாற்று அறுவைசிசிச்சை குறித்த விளக்கம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று, மக்கள்-மருத்துவர் உறவை மேம்படுத்துவதற்கான விழிப்புஉணர்வு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்று பல்வேறுவிதமான நோய்கள், அவற்றுக்கான அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து விளக்கமளிப்பார்கள். அந்த வகையில், இன்று (04/06/2016) காலை சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை துறை சார்பில் கலந்துரையாடல் நடந்தது. இதில், அந்தத் துறையின் இயக்குநரும் பேராசிரியருமான கோவிந்தராஜ் பங்கேற்று, சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை எப்படி நடக்கும் என்பது பற்றி விவரித்தார்.

கருந்தரங்கு

அப்போது அவர் பேசும்போது, ``ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1986 முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு வகையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை  நடைபெறுகிறது. உடல் உறுப்பு தான ஆணையத்தில் பதிவு செய்தவர்களுக்குப் பதிவு மூப்பின்படி மூளைச்சாவடைந்தைவரிடமிருந்து அல்லது ரத்த சம்பந்தமான உறவினரிடமிருந்தும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். 

மூளைச்சாவடைந்தவர்களிடமிருந்து 1,155 பேருக்கும், ரத்த சம்பந்தமான உறவினரிடமிருந்து  254 பேருக்கும் என இதுவரை 1,409 பேருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த ஆண்டிலிருந்து லேப்ராஸ்கோப்பி என்னும் நவீன முறை சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நவீன முறையில் இதுவரை 12 பேருக்கு அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தச் சிகிச்சை வெகு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுகிறது. மேலும், இந்தச் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவாகும். இங்கு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. எனவே, நீண்ட நாள் சிறுநீரகப் பாதிப்புள்ளவர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க