தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிறையில் முகிலன் உண்ணாவிரதப் போராட்டம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக முகிலன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக முகிலன் அறிவித்துள்ளார்.

முகிலன்

அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக சுற்றுச்சூழல் போராளியான முகிலன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு ஏழு மாதங்களுக்கு மேலாகியும் ஜாமீன் கேட்காததால் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். அவரை இன்று வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினார்கள். 

அப்போது வேனில் வந்து இறங்கிய அவர், ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸாரைக் கைது செய். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மத்திய அரசே சட்டம் இயற்று. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்’ என கோஷங்களை எழுப்பினார். பின்னர், குற்றவியல் நடுவர் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அதைத்தொடர்ந்து மீண்டும் பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு அவரை அழைத்துச் சென்றபோது, செய்தியாளர்களைப் பார்த்துப் பேசுகையில், ``கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய ஒரு லட்சம் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும். கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையின் உள்ளே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளேன். என்ன நடந்தாலும் எனது போராட்டம் தொடரும், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் ஆணை உதவாது. அதனால் உரிய வகையில் அரசாணை வெளியிடப்பட்டு நிரந்தரமான சட்டத்தின் மூலமாக ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!