வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (04/06/2018)

கடைசி தொடர்பு:19:44 (05/06/2018)

தண்ணீர்ப் பிரச்னையில் இந்தியாவின் கேப்டவுனாக மாறுகிறதா சிம்லா?

``மலைகளை விரும்புபவர்களுக்கு ஒரு வேண்டுகோள், சிறிது காலம் சிம்லாவுக்குச் சுற்றுலா வருவதை நிறுத்திக்கொள்ளுங்கள்" என சிம்லாவாசி ஒருவர் ட்விட்டரில் எழுதியது பயங்கர வைரலாகியுள்ளது. இதுபோன்று பலரும் சமூக வலைதளங்களில் இப்பிரச்னையின் தீவிரத்தைப் பதிவிட்டு வருகின்றனர். அரசு விநியோகிக்கும் தண்ணீரைக் கூட சிலர் முறைகேடாகப் பணம் கொடுப்பவர்களுக்கு விற்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தண்ணீர்ப் பிரச்னையில் இந்தியாவின் கேப்டவுனாக மாறுகிறதா சிம்லா?

ஒரு பக்கெட் தண்ணீரின் விலை 3500 ரூபாய். 

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை 42 ரூபாய்.

தண்ணீருக்கு இவ்வளவு விலை ஏதோ வெளிநாடுகளிலோ, தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனிலோ இல்லை. நமது நாட்டின் முக்கியமான சுற்றுலாத்தளமான சிம்லாவில்தான் தண்ணீருக்கு இவ்வளவு விலை. சிம்லாவில் தண்ணீர்ப் பற்றாக்குறை இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. ஒரு பக்கெட் தண்ணீருக்காக மிகநீண்ட வரிசைகளில் காத்துக்கிடக்கின்றனர் பொதுமக்கள். அங்கு காணப்படும் காட்சிகளும், சொல்லப்படும் விதிமுறைகளும் கேப்டவுனின் டே ஜீரோவைத்தான் நியாபகப்படுத்துகின்றன. 

இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சிம்லா, ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகராகும். கங்கைச் சமவெளிக்கு அருகில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களின் வசதிக்காகக் கோடை வாசஸ்தலமாக மாற்றப்பட்டது. அதன்பின் இப்போது வரை இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தளமாக இருக்கிறது. சிம்லா இப்போது முக்கியப் பிரச்னையில் சிக்கியிருக்கிறது. தண்ணீர்ப் பற்றாக்குறை அங்குள்ள ஊள்ளூர்வாசிகளை மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாகப் பாதித்து வருகிறது. மக்கள் வீதிகளில் தண்ணீருக்காக அலைகின்றனர். அரசு விநியோகிக்கும் கொஞ்ச, நஞ்சம் தண்ணீரையும் தேடித் தேடி பெறுகின்றனர். நாளொன்றுக்கு ஒட்டுமொத்த நகரத்தின் குடிநீர்த்தேவை 45 மில்லியன் லிட்டர் ஆனால் சராசரியாகக் கிடைப்பதோ 18 மில்லியனிலிருந்து 22 மில்லியன் லிட்டர் மட்டுமே. ஆனால், சமீபகாலங்களில் இந்த அளவும் கிடைப்பதில்லை. இதனால் சிம்லா முழுவதும் தண்ணீருக்காகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. தண்ணீர் விநியோகம் நடைபெறும் இடங்களில் மக்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கலவரங்கள் ஏற்படாமல் இருக்கவும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் சிம்லா நகரம் கட்டமைக்கப்பட்டபோது வெறும் 16,000 பேர் மட்டுமே இருந்தனர். தற்போது சிம்லாவின் மக்கள்தொகை 1,72,000 பேர். சுற்றுலா சீசன் காலங்களான ஜீன், ஜூலை மாதங்களில் சிம்லாவில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருவது வழக்கம். நாளொன்றுக்கு 30,000 லிருந்து 40,000 வரை சுற்றுலாப் பயணிகள் சிம்லாவுக்கு வருகின்றனர். அந்த நேரத்தில் நகரத்தின் தண்ணீர்த் தேவை இன்னும் அதிகரிக்கும். 

சிம்லா

இதனால் சிம்லாவின் உள்ளூர்வாசிகள் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு எதிர்ப்புத் தெரித்து வருகின்றனர். ``மலைகளை விரும்புபவர்களுக்கு ஒரு வேண்டுகோள், சிறிது காலம் சிம்லாவுக்குச் சுற்றுலா வருவதை நிறுத்திக்கொள்ளுங்கள்" என சிம்லாவாசி ஒருவர் ட்விட்டரில் எழுதியது பயங்கர வைரலாகியுள்ளது. இதுபோன்று பலரும் சமூக வலைதளங்களில் இப்பிரச்னையின் தீவிரத்தைப் பதிவிட்டு வருகின்றனர். அரசு விநியோகிக்கும் தண்ணீரைக் கூட சிலர் முறைகேடாகப் பணம் கொடுப்பவர்களுக்கு விற்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதையெல்லாம் கவனித்த ஹிமாச்சல பிரதேச உயர்நீதி மன்றம் தாமாக முன்வந்து இப்பிரச்னையை விசாரித்து சில உத்தரவுகளைத் தீர்ப்பாக வழங்கியுள்ளது. சிம்லாவில் கட்டுமானத் தொழிலை தடை செய்துள்ளது, பைக், கார் போன்றவற்றை வாட்டர்வாஷ் பண்ணுவதற்கும் தடை விதித்துள்ளது. விஐபி வீடுகளுக்கோ தனிப்பட்ட நபர்களுக்கோ தண்ணீர் விநியோகிப்பதற்கும் தடை விதித்துள்ளது. ஹோட்டல்களுக்குத் தண்ணீர் வழங்குதலும் தடை செய்துள்ளது. சிம்லாவில் மொத்தம் 224 ஹோட்டல்கள் இருக்கின்றன. அவற்றுக்கு 527க்கும் மேற்பட்ட தண்ணீர் இணைப்புகள் இருக்கின்றன. தற்போது அவை அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதையும் மீறி வந்து மாட்டிக்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்குத்தான் ஆரம்பத்தில் சொன்ன விலை. 

இதுகுறித்து ஹிமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், ``எதிர்பார்த்தப் பனிப்பொழிவு இல்லாதது, தண்ணீர் பெறக்கூடிய வழிகளெல்லாம் வறட்சியானதுதான் முக்கியக் காரணம்" என்கிறார். ஆனால், அரசின் அலட்சியமான நிர்வாகமே பிரச்னை தீவிரமானதுக்குக் காரணம் என்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாகவே தண்ணீர் விநியோகம் குறைவாகத்தான் இருந்துள்ளது. அரசு எந்த முன்னேற்பாட்டையும் எடுக்காததின் விளைவு கடந்த மே 20க்குப் பின் தண்ணீர்ப் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிம்லாவுக்குத் தண்ணீர்த் தரக்கூடிய ஆறு முக்கிய நீர் ஆதாரங்களாக இருப்பது கும்மா, கிரி, அஷ்வினி காட், சுர்டா, செயோக். இவற்றில் அஷ்வினி காட் நீர் ஆதாரமானது வேதியியல் கலப்படத்தால் 10 பேர் உயிரைப் பலி வாங்கியுள்ளது. அந்த நீரைக் குடித்ததால் பலருக்கும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கின. இதனால் 2015 ம் ஆண்டு அஷ்வினி காட் மூடப்பட்டுவிட்டது. மற்ற ஐந்து நீர் ஆதாரங்களும் போதிய நீரின்றி வறண்டுள்ளன. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

 

சிம்லா

கடந்த சில நாள்களுக்கு முன்புதான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிம்லாவில் குடும்பத்துடன் விடுமுறையைக் கழித்துள்ளார். இமயமலை அடிவாரத்தில் இருக்கும் சிம்லா போன்ற இடங்களில் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவது என்பது வழக்கமான செயல்பாடாக இல்லை என அச்சம் தெரிவிக்கின்றனர் சூழலியலாளர்கள். நீர்ப் பயன்பாடு, விநியோகம் குறித்துப் பார்க்கும் தரவுகளும் அதிகமாக எச்சரிக்கை செய்கின்றன. மத்திய நீர்க் குழுவின் அறிக்கை படி, இந்தியாவின் பல நகரங்கள் தேவையான நீரில் 29% தை மட்டுமே பெறுகின்றன. உலக வங்கியின் ஆய்வின்படி 163 மில்லியன் இந்தியர்கள் பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில்லை. உலகத்தில் 17% மக்கள்தொகையை வைத்திருக்கும் இந்தியாவிடம் 4% மட்டுமே நன்னீர் ஆதாரம் இருக்கிறது. மோசமான நீர் மேலாண்மையினால் பல்வேறு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். பசுமைப் புரட்சிக்குப் பின் நாம் பயிரிடும் பயிர்களும், வேளாண்மை முறையும் 90% நீரை எடுத்துக்கொள்கிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில்தான் கேப்டவுனின் டே ஜீரோவைப் பற்றி பதறிக்கொண்டிருந்தோம். நமது நாட்டிலேயே கண்முன்னே இன்னொரு கேப்டவுன் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் எதைத் தீர்வாக முன்னெடுக்கப் போகிறோம்?


டிரெண்டிங் @ விகடன்