வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (05/06/2018)

கடைசி தொடர்பு:00:00 (05/06/2018)

`கவலைப்பட வேண்டாம், இன்னும் 2 வாய்ப்புகள் உள்ளன' - நீட் தேர்வு முடிவு குறித்து தமிழிசை!

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு இன்னும் இரண்டு வாய்ப்புக்கள் உள்ளன எனத் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழிசை

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி என்னும் மாணவி 691/720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்திலிருந்து 1,14,602 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் பாதிக்கும் குறைவாக அதாவது, 45,336 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 39.55% மட்டுமே. தேசிய அளவில் முதல் 50 இடங்களில் தமிழகத்தில் இருந்து ஓரே ஒரு மாணவி மட்டுமே இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் நீட் தேர்வில் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. மாணவர்கள் நீட் விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

இந்நிலையில், நீட் தேர்வு முடிவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,  ``நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தமிழக மாணவி 12வது இடத்தைப் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்ச்சியடையாத மாணவர்கள் கவலைப்பட வேண்டாம், இன்னும் 2 வாய்ப்புகள் உள்ளன. நீட் தேர்வில் கடந்தாண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இன்னும் சரியான பயிற்சி அளித்தால் தமிழக மாணவர்கள் முன்னேற அதிக வாய்ப்பு. " எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க