‘பொய் சாட்சி சொல்லலைன்னு வேலையை விட்டே தூக்கிட்டாங்கய்யா!’ - கலெக்டரிடம் கதறிய பணியாளர்கள்

பணியாளர்கள்

‘பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேரூராட்சி செயல் அலுவலருக்கு ஆதரவாக பொய் சாட்சி சொல்லததால் வேலையை விட்டே நீக்கிவிட்டார்கள்’ என கண்ணீருடன் துப்புரவுப் பணியாளர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு அளித்தனர். 

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, ஆப்பக்கூடல் பேரூராட்சியில் செயல் அலுவலராகப் பணியாற்றியவர் பிரபாகரன். இவர் அங்கு வேலைபார்த்த பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சிக்க, அந்தப் பெண் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து, பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றி பணியாளர்களை விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்திருக்கின்றனர். இந்தத் தகவலையறிந்த செயல் அலுவலர் பிரபாகரன், ‘அந்த மாதிரியான தவறுகள் எதுவும் நடக்கவில்லை என எனக்கு ஆதரவாக பொய் சாட்சி சொல்லிவிட்டு வாருங்கள்’ என, பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களை அனுப்பியிருக்கிறார்.

பணியாளர்கள்

ஆனால், துப்புரவுத் தொழிலாளர்களோ விசாரணையின் போது, ‘என்ன நடந்தது என எங்களுக்குத் தெரியாது’ என பதில் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். இதனையறிந்து கோபமான செயல் அலுவலர் பிரபாகரன், தனக்கு ஆதரவாக பொய் சாட்சி சொல்லாத அந்த 4 ஒப்பந்த துப்பரவுப் பணியாளர்களை பணி நீக்கம் செய்திருக்கிறார். எந்தவித காரணமும் இல்லாமல், பொய்சாட்சி சொல்லவில்லை என்கின்ற காரணத்தால் வேலையை விட்டு நீக்கி, எங்கள் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம் என வலி மிகுந்த குரலில் துப்புரவுத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். 

சாட்சி

இதுகுறித்து பாதிக்கப்பட்ட துப்புறவுத் தொழிலாளர்களிடம் பேசினோம். “பொய்சாட்சி சொல்லவில்லை என்கின்ற காரணத்தால் எங்களை வேலையை விட்டு தூக்கியிருக்கிறார்கள். கடந்த 7 மாதங்களாக வேலையில்லாமல், மிகுந்த சிரமத்தோடு குடும்பம் நடத்தி வருகிறோம். ஏற்கனவே, வெறும் 3 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கொடுத்தார்கள். அதிலே, பல முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி மறுபடியும் வேலை கிடைத்திட வழிவகை செய்தும், மாத மாதம் வழங்கிய சம்பளங்களில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொணரவும் வேண்டும்” என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!