வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (04/06/2018)

கடைசி தொடர்பு:21:05 (04/06/2018)

நூறு நாள்களைக் கடந்த கமல்ஹாசனின் `மக்கள் நீதி மய்யம்’.. மற்ற கட்சிகளின் பார்வை என்ன?

கமல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தொடர்ந்து ட்விட்டரில் ஆளுங்கட்சியை விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21ம் தேதியன்று `மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். அவர் கட்சி தொடங்கி நூறு நாள்கள் நிறைவடைந்துவிட்டன. இந்த நூறு நாள்களில் `மக்கள் நீதி மய்ய'த்தின் செயல்பாடுகளின் ப்ளஸ், மைனஸ்களாக மற்ற அரசியல் கட்சியினர் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டறிந்தோம்..  

டி.ஜெயக்குமார் (மீன்வளத்துறை அமைச்சர், அ.இ.அ.தி.மு.க): 

``கட்சி தொடங்கும் அனைவருக்கும் முதல்வராக வேண்டும் என்கிற ஆசை இருக்கும். கமல்ஹாசனுக்கு அப்படி ஒரு ஆசை இருப்பதும் நியாயமானதுதான். ஆனால், அவர் கூட்டத்தில் ஒருவரா, தனி ஒருவரா, ஆயிரத்தில் ஒருவரா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க முடியும். நான் தொடர்ந்து ஐந்து முறை தேர்தலில் வென்று, அமைச்சராக இருக்கிறேன். அதன் காரணம் நான் மக்களுடன் நிற்கிறேன். ஆனால், கமலின் செயல்பாடுகளை நூறு நாள்களில் என்னால் அளவிட முடியாது. தேர்தல் வரும்போது மக்கள் அவருக்குச் சில முடிவுகளை உணர்த்துவார்கள்."    

மனுஷ்ய புத்திரன் (தி.மு.க);

``ஒரு திரைப்படத்தின் நூறாவது நாளை நாம் எப்படிப் பேசுவோமோ, அதைப் போல ஒரு கட்சியின் நூறாவது நாளைப் பற்றி பேசும் நிலைக்கு, கட்சி அரசியல் எளிமையாகி விட்டது. நூறு ஆண்டு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் இதை அதிர்ச்சியுடன் பார்க்கிறேன். ஒரு கட்சி என்பது நூறு நாள்களில் பல்வேறு நிலைகளில், தன் நிலைப்பாட்டை எப்படி எடுக்கிறது, அதன் தலைவர் எப்படித் தன்னுடைய உத்திகளை வகுக்கிறார் என்பதை பொறுத்த விஷயம். அப்படிப் பார்த்தால், கமல்ஹாசன் இந்த நூறு நாள்களில் நிறைய ட்வீட் போட்டிருக்கிறார்; நிறைய மேடைகளில் பேசியிருக்கிறார். ஆனால் அவர் ஆழமான அரசியல் புரிதலுடன் எந்தப் பிரச்னையையும் பேசியதில்லை. தமிழ்நாட்டில் இத்தனை பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் அவருடைய கட்சியைச் சேர்ந்த எவரும் ஒரு சிறு போராட்டம் கூட நடத்தவில்லை. அவருடைய கட்சி சார்ந்த முயற்சிகள் கோமாளித்தனமான காட்சிகளைப் போல் இருக்கின்றன. அவர் அரசியல் களத்தில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால், தன்னுடைய கோட்பாடுகளைத் தெளிவாக முன்வைக்க வேண்டும். கமல்ஹாசனால் ஒரு கட்சியை நடத்த முடியாது என்பதை அவரே வெளிபடுத்திக்கொண்டிருக்கிறார். அவருடைய ஒவ்வொரு சொல்லும், செயலும் அவரைக் கண்டு யாரும் அரசியல்ரீதியாக பதற்றமடைய வேண்டியதில்லை என உணர்த்துகின்றன."      

அரசியல் கட்சியினர்

ஆளூர் ஷாநவாஸ் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) : 

``கமல்ஹாசனின் செயல்பாடுகள் அறிவுஜீவிகளின் தளத்தில் மட்டுமே நிற்கின்றன. இன்னும் களத்தில் அவர் செயல்படவில்லை. ரஜினி 'போராட்டங்களினால் தீர்வு கிடைக்காது' என்று பட்டவர்த்தனமாகப் போட்டு உடைக்கிறார். ஆனால், கமல்ஹாசன் தனக்கே உரிய பாணியில், அதே கருத்தை வார்த்தைகளால் பூசி மெழுகிறார். போராட்டங்களுக்கு மாற்றாக ரஜினியும், கமலும் என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள்? ’ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்’ என நாங்கள் சொல்கிறோம்; `மூடக் கூடாது’ என பா.ஜ.க சொல்கிறது. ஆனால் ரஜினியும், கமலும் அதன்மீது தெளிவான கருத்துகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பா.ஜ.க கூட தன் நிலைப்பாட்டில் நேர்மையாக இருக்கிறது. இவர்கள் இருவரும் நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் வேண்டாம் எனக்கூறும் கமல், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக என்ன செய்திருக்கிறார், இதுவரை எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்? இதுதான் அவரது பின்னடைவாக நான் பார்க்கிறேன். 

ரஜினியைப் போல அல்லாமல், கமலுக்கு அனைத்து விஷயங்களின் மீதும் ஒரு பார்வை இருக்கிறது. அதற்கு காரணமாக, தமிழ் மண்ணின் நிலைமையைப் புரிந்துகொண்ட பாரதி கிருஷ்ணகுமார், கு.ஞானசம்பந்தன் ஆகியோர் அவருக்குப் பின்னணியில் இருக்கின்றனர். ரஜினியா, கமல்ஹாசனா என்று ஒப்பிட்டால் ரஜினியை விட கமலுக்கு இந்த மண்ணைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது."

அர்ஜுன் சம்பத் (இந்து மக்கள் கட்சி):

``கமல்ஹாசன் தொடங்கியுள்ள `மக்கள் நீதி மய்யம்’ என்கிற அமைப்பு ஒரு தொண்டு நிறுவனத்தைப் போல செயல்படுகிறது. அந்த செயல்பாடுகளுக்கு வலிமை சேர்க்கக்கூடிய வகையில் அதன் தலைவராக இருக்கும் கமல்ஹாசனின் புகழ் முக்கியக் காரணமாக இருக்கிறது. கிராமசபை கூட்டம், `மய்யம் விசில்' என்கிற ஆண்ட்ராய்டு ஆப் மூலம் ஊழலுக்கு எதிராக அவர் செய்யும் விழிப்புஉணர்வு முதலான முயற்சிகள் பாராட்டத்தக்கன. இவை அவர் மக்களின் நன்மைக்காக முயற்சி செய்து வருபவை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டு மக்கள் திராவிட இயக்கத்திற்கு மாற்று சக்தியை எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், கமல் தன்னைத் திராவிட இயக்கத்துக்காரராகவும், இடதுசாரி சிந்தனையாளராகவும், பா.ஜ.கவின் எதிர்ப்பாளர்களைத் தன்னோடு இணைத்துக் கொள்பவராகவும் தன்னை வெளிப்படுத்துகிறார். அவர் கட்சியில் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களின் திராவிட, இடதுசாரி பின்னணியும் இதற்குக் காரணமாக அமைகிறது. மேலும், அவருடைய கருத்துகள் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியாதவையாகவும் இருக்கின்றன. இவையெல்லாம் அவருக்கும் மிகப்பெரிய பின்னடைவு. 

கமல்ஹாசன் தேசபக்தியுள்ள, பாரம்பர்யமான குடும்பத்திலிருந்து வந்தவர். கலைஞர், ஜெயலலிதா போன்ற தலைமைகள் இல்லாத இந்தச் சூழலில், கமல்ஹாசன் ரஜினியின் 'ஆன்மிக அரசிய'லை வெறுக்காமல், ரஜினியைத் தலைவராக ஏற்று பணியாற்ற வேண்டும். அது தான் மக்களுக்கும் நன்மை தரும்."


டிரெண்டிங் @ விகடன்