வெளியிடப்பட்ட நேரம்: 06:26 (05/06/2018)

கடைசி தொடர்பு:06:26 (05/06/2018)

‘பெருந்துறை சிப்காட் ஆலை, இன்னொரு ஸ்டெர்லைட் ஆலை’ - வெடிக்கும் த.மா.கா யுவராஜா...

ஸ்டெர்லைட் ஆலையை விட பெருந்துறை சிப்காட் பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகள் 10 மடங்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன’ என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். கையில் மாசடைந்த கலங்கலான குடிநீரை பாட்டிலில் கொண்டு வந்து, ‘இந்த மாசடைந்த தண்ணீரைத் தான் ஈரோடு மக்கள் குடிக்கிறார்கள். அதிகாரிகள் இதனை உடனடியாக கவனித்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென’ அந்த தண்ணீரை தரையில் ஊற்றி கண்டனம் தெரிவித்தார். தமிழக அரசு உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதன் காரணத்தால்  உள்ளாட்சி வளர்ச்சிப் பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது என குற்றம்சாட்டினார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 13 இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகளால் ஈரோடு மாவட்ட மக்கள் கேன்சர் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை விட 10 மடங்கு பாதிப்பை ஈரோடு மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

அதுமட்டுமல்லாமல், பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகளை களைய, அப்பகுதி மக்கள் ஏற்படுத்தியுள்ள கூட்டமைப்பிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, அவர்களோடு இணைந்து போராடவும் முடிவெடுத்திருக்கிறோம்” என்றார்.