வெளியிடப்பட்ட நேரம்: 03:27 (05/06/2018)

கடைசி தொடர்பு:10:21 (05/06/2018)

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பலி..! ரஜினிகாந்த் வேதனை

'நீட் தேர்வு தோல்வியால் மாணவி உயிரிழந்தது பரிதாபத்துக்குரியது. இதைத் தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த்

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'கர்நாடகாவில் 'காலா' படத்தை தமிழர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பார்க்க விரும்புகிறார்கள். 'காலா' படத்தை வெளியிட கர்நாடக அரசின் முதல்வர் குமாரசாமி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக நான் பேசிய விவகாரம் தவறாக சித்திரிக்கப்படுகிறது.

நான் பேசியதை இணையதளங்களில் பார்க்க முடியும். அதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அரசியல் வேறு; சினிமா வேறு. என் படத்துக்கு தற்போது எதிர்ப்பு குறைவாக இருப்பதாகவே உணர்கிறேன். படத்தில் நல்ல அம்சங்கள் இருந்தால்தான் மக்கள் வெற்றியடையச் செய்வார்கள். எஸ்.வி.சேகரை காவல்துறையினர் கைதுசெய்யாமல் இருப்பது தொடர்பாக கருத்துக் கூற விரும்பவில்லை. நீட் தேர்வு தோல்வியால் மாணவி உயிரிழந்தது பரிதாபத்திற்குரியது. இதைத் தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள்' என்று தெரிவித்தார்.