வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (05/06/2018)

கடைசி தொடர்பு:10:02 (05/06/2018)

தீ வைப்பில் உயிரிழந்தவருக்கு இழப்பீடு கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு நடந்த பேருந்து தீ வைப்பில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த வள்ளியம்மாள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் கேட்டு உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில், கடந்த 22-ம் தேதி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு மாவட்டத்தில் 3 தாலுக்காக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாவட்டத்தின் சில பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு, பேருந்து மீது கல்வீச்சு, பேருந்து எரிப்பு ஆகிய சம்பவங்களும் நடைபெற்றுவந்தன.

இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை, கருங்குளம் அருகில் 3 பேர்  மறித்து தீ வைத்தனர். 

பேருந்தில் பயணம் செய்த 52 பேர் உடனடியாக இறக்கிவிடப்பட்டனர். இதில் சுடலை என்பவர், அவரது மனைவி வள்ளியம்மாள் மற்றும்  ஜெபக்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர்.  நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தனர்.

இந்நிலையில், வள்ளியம்மாள் சிகிச்சை பலனின்றி கடந்த 31-ம் தேதி உயிரிழந்தார். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த வள்ளியம்மாளின் மகன் ஆறுமுகம் மற்றும் உறவினர்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு டி.ஆர்.ஓ-விடம் மனு அளித்தனர்.

வள்ளியம்மாளின் மகன் ஆறுமுகத்திடம் பேசினோம். 'கடந்த 25-ம் தேதி, உடன்குடியிலிருந்து நெல்லைக்கு  அரசுப் பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது, அந்தப் பேருந்தின்மீது  கலவரக்காரர்கள் தீ வைத்தனர்.  அதில் பலத்த தீக்காயம் அடைந்த எனது அம்மா வள்ளியம்மாள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அப்பா சுடலைக்கு முகம் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். ஸ்டெர்லைட் கலவரத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அனைவருக்கும் அரசு, ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக  அறிவித்துள்ளது.

எனது அம்மா வள்ளியம்மாளின் மரணத்துக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்கி, எனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதற்கு, கலெக்டர் உறுதி அளிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்' என்றார். இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க