மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் சிவன் சிலை..!

Lord Shiva statue

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஐம்பொன் சிவன் சிலை, அப்பகுதி மக்களை மெய்சிலிர்க்கவைத்துள்ளது.  

சிவன் சிலை

காவிரியின் கிளை நதியான கொள்ளிடம் ஆற்றில், மீனவர்கள் புஷ்பராஜ் மற்றும் குமார் ஆகிய இருவர், காவல் நிலைய சோதனைச்சாவடி அருகே படகிலிருந்து வலையை வீசி மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, வலையில் பெரிய மீன் சிக்கியதைப் போன்று இருந்தது. உடனடியாக வலையை கரைக்கு எடுத்துவந்து பார்த்தபோது அதிர்ந்தனர். வலைக்குள் முக்கால் அடி உயரமும், நான்கு கிலோ எடையும் கொண்ட அழகிய சிவன் சிலை சிக்கி இருப்பதைக் கண்டனர்.

புலித்தோல்மீது சிவன் அமர்ந்திருப்பது போன்றும், பின்புறம் நந்தி சிலை, உடுக்கை, சூலம், கமண்டலம் ஆகியவற்றோடு தலைக்கு மேல் மரக்கிளையில் இரண்டு மயில்கள் அமர்ந்திருப்பதுபோன்ற கலைநயத்துடன் அச்சிலை காட்சியளித்தது. சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது என்றும், பல லட்ச ரூபாய் மதிப்புள்ளது என்றும் தெரியவருகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூஜிக்கப்பட்ட பழைமையான சிலையை வெளியூரிலிருந்து கடத்தி வரப்பட்டபோது, கொள்ளிடம் சோதனைச்சாவடியில் உள்ள போலீஸாரைப் பார்த்தவுடன் பயந்து ஆற்றில் வீசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது அல்லது இச்சிலை ஏதாவது புகழ்பெற்ற பழைமையான கோயிலில் இருந்து திருடப்பட்டு, கொள்ளிடம் ஆற்றில் தற்காலிகமாக மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த சிவன் சிலை கொள்ளிடம் காவல் நிலையத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!