குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..! கச்சநத்தத்தில் நல்லக்கண்ணு வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில், ஒரு பிரிவினரின் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த குடும்பத்தினரைச் சந்தித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நேற்று ஆறுதல் கூறினார்.

நல்லக்கண்ணு

இந்நிலையில், அங்குள்ள பள்ளி வளாகத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம், ``கச்சநத்தம் கிராமத்தில் விவசாயத்தை நம்பி வாழக்கூடிய பட்டியலின மக்களைத் திட்டமிட்டுக் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆதிக்க ஜாதியினர் விரட்டிவிரட்டி வெட்டி, கோரமாகக் கொலை செய்துள்ளனர். அதிகாரிகளுக்குத் தெரிந்தும், கொடூர கொலைச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பது வேதனைக்குரியது. மேலும், வழக்குகளை முறையாக நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும். ஜாதி வெறிகொண்ட இளைஞர்களை அக்கிராமத்தில் உள்ள பெரியோர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

ஆட்சியில் உள்ளவர்களாவது அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்தத் தவறுவதால், படித்துவிட்டு விவசாயம் செய்யும் பட்டியலின வகுப்பு இளைஞர்கள் கச்சநத்தம் கிராமத்தில் வாழ முடியாத நிலை உள்ளது. சமூகத்தில் நீதி கிடைக்க வேண்டும். கிராமங்களில் மக்கள் அமைதியாக வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடையை ஒற்றுமையை உருவாக்க வேண்டும்'' என்றார்.
அவருடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் குணசேகரன், தங்கமணி, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கண்ணகி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!