ஆண்களைக் கைதுசெய்வதை நிறுத்த வேண்டும்..! தூத்துக்குடி ஆட்சியரிடம் பெண்கள் கோரிக்கை

தூத்துக்குடியில், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்  குடியிருப்புப் பகுதிகளில் போலீஸாரின்  கைது நடவடிக்கையால் அச்சம் நிலவுவதாகவும், கைது நடவடிக்கையை நிறுத்திட வேண்டும் எனவும் ஆட்சியரிடம் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். 

தூத்துக்குடியில், கடந்த 22-ம் தேதி நடந்த  துப்பாக்கிச் சூட்டுக்குப் பின், மாவட்டத்தில் நிலவிய பதற்றமான சூழல் மறைந்து மெள்ள மெள்ள அமைதி திரும்பிவருகிறது.  இருப்பினும், மாநகரின் முக்கியப் பகுதிகளில் போடப்பட்டிருந்த  போலீஸ் பாதுகாப்பு முழுமையாக விலக்கப்படவில்லை. 

கடந்த திங்கள் கிழமை, வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.  இதனால் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, முதல் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. 25-க்கும் குறைவானவர்களே ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் தங்களின் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். 

அதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தூத்துக்குடியில் கடந்த 23 ஆண்டுகளாக நச்சு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்த மக்கள், கடந்த 22-ம் தேதி நடத்திய முற்றுகைப் போராட்டத்தில், அன்றைய தினம் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.  

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றத்தைத் தணித்து அமைதி திரும்பிட வேண்டும். அப்பாவி மக்களை துப்பாக்கியால் சூட்டுக் கொல்ல உத்தரவிட்ட அதிகாரிகள்மீது கொலை வழக்குப் பதிவுசெய்து, அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தற்போது நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரில், ஆலையை மூட வேண்டும் என, சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 

துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த 13 பேரின் நினைவாக, நகரின் மையப்பகுதியில் நினைவுத்துாண் அமைக்கப்பட வேண்டும். இதில் துப்பாக்கிச் சூட்டிலும், தடியடியாலும் காயம்பட்டவர்களுக்கு, ரூ.20 லட்சம் நிவாரணம் அளிப்பதுடன், துப்பாக்கிச் சூட்டில் கால்களை இழந்த இரண்டு பேருக்கும் அரசுப் பணி வழங்க வேண்டும்.

இரவு நேரங்களில், வீடுகளுக்குச் சென்று  தனியாக இருக்கும் பெண்களை மிரட்டியும், ஆண்களைக் கைதுசெய்யும் காவல் துறையினரின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

அதிகப்படியாக ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை விலக்க வேண்டும். இதனால், இயல்பான வேலைகளில் ஈடுபடமுடியவில்லை. அனைத்துக்கும் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கப்படாது என உத்தரவாதம் அளித்து, ஆலையின் கட்டடத்தை இடிக்க உத்தரவிட வேண்டும்' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!