வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (05/06/2018)

கடைசி தொடர்பு:12:33 (05/06/2018)

" நாங்க கலெக்டர் ஆபிஸுக்கு போறதுக்கு முன்னாடியே, வண்டிலாம் எரிஞ்சுட்டு இருந்துச்சு!’’ தூத்துக்குடி போராட்டக்காரரின் அனுபவம்

மே 22-ம் தேதி... மக்கள் உரிமை, தோட்டாக்களால் துளைக்கப்பட்ட நாள்! மக்களின் வாழ்வாதாரத்துக்கான 100-வது நாள் அறவழிப் போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்ட நாள். தூத்துக்குடி இன்னொரு ஜாலியன் வாலாபாக் ஆன நாள். ஆனால், இவ்விவகாரத்தில் 'ஜெனரல் டயர்' யார் என்பதுதான் இன்றுவரை மறைக்கப்பட்டு வருகிறது.  மக்களை மிரட்ட, போராட்டத்தை கலைக்க, கலவரத்தை உருவாக்க, காவல்துறையே தீ வைக்கும் பணியையும் மேற்கொண்டதையெல்லாம் ஏற்கெனவே மெரினாவில் பார்த்தவர்கள்தான் நாம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது காக்கிகள் ஆட்டோவுக்கு தீ வைத்த காணொளி இன்னும் நம் கண்ணுள் நிற்கிறது. இதே பாணிதான் தூத்துக்குடியிலும் பின்பற்றி  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தூத்துக்குடி மக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

"திரேஸ்புரம் பகுதியில்தான் தூத்துக்குடி ஆட்சியரின் வீடும், எஸ்.பி-யின் வீடும் இருக்கிறது.  கலவரம் உண்டாக்க வேண்டுமென்று மக்கள் நினைத்திருந்தால், ஆட்சியர் வீட்டின் முன்போ, எஸ்.பி வீட்டின் முன்போ வன்முறையை நிகழ்த்திருக்கலாமே? திரேஸ்புரத்திலிருந்து கிளம்பி ஆட்சியர் அலுவலகம் வரை சென்று கலவரம் செய்ய வேண்டும் என்ற அவசியமே எங்களுக்கில்லை. எங்களின் நோக்கம் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை வீடு வாசல் திரும்பாமல் ஆட்சியர் அலுவலக வாசலில் போராடுவது மட்டுமே. தீ வைத்துக் கலவரம் மூட்டியது காவல்துறைதான்."  என்கிறார் குமரெட்டியாபுரம் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.

தூத்துக்குடி, ஸ்டெர்லைட்

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட பெயர் வெளியிட விரும்பாத போராட்டக்காரர் நமக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-   
 
``மாதா கோவில் போராட்டக் களத்திலிருந்து மக்களை நான்தான் வழிநடத்தி வந்தேன். முதலில் நான் கோஷம் எழுப்பியபடி முன்னின்று சென்றேன். எனக்குப் பின் திருநங்கைகள் சிலரும், அதன் பின்னர் பெண்களும் பேரணியாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். வி.வி.டி சிக்னல் வரும்வரை எந்தவிதப் பிரச்னையும் ஏற்படவில்லை. அதுவரை காவல்துறை போட்டுவைத்திருந்த தடுப்புகளை நகர்த்திவிட்டு வந்தோமே தவிர்த்து எந்தவித வன்முறையிலும் நாங்கள் ஈடுபடவில்லை. வி.வி.டி சிக்னல்  தாண்டிய பின்னர்தான் போராட்டத்துக்கு சம்பந்தம் இல்லாத சிலர் உள்ளே நுழையத் தொடங்கினர். நிச்சயமாகக் கூற முடியும் அவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்தான். மஃப்டியில் வந்திருந்தார்கள். வி.ஓ.சி கல்லூரி தாண்டியதிலிருந்து பெரும் சத்தம். எஃப்.சி.ஐ. பாலம் வரை சில சிக்னல்கள் அடித்து உடைக்கப்படுகிறது. அவர்கள் யாரும் பேரணியைச் சேர்ந்தவர்களில்லை. ஏனென்றால், எனக்குப் பின்னே ஒரு கிலோமீட்டருக்கு பெண்கள் கூட்டம் மட்டும்தான். எஃப்.சி.ஐ பாலத்தின் மேலிருந்து காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அப்போது மக்கள் பேரணி பாலத்தை நெருங்கவில்லை. பாலத்தை நெருங்கும் முன்னரே பாலத்துக்குக் கீழே இருந்த வாகனங்கள் தீயில் எரிந்துகொண்டிருந்தன. 

தூத்துக்குடி

ஒரு பகுதி காவல்துறையினர் பைபாஸுக்குள் சென்றனர், மற்றொரு பிரிவினர் ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்றனர். அதில், நானும் என் மனைவியும்தான் முதலில் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றோம், எங்களுக்குப் பின்னர் பெண்கள் கூட்டமாக வந்துகொண்டிருந்தார்கள். அதற்கு முன்  ஆண்கள் கூட்டம் யாருமில்லை. ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்ல, ஆர்ச்சிலிருந்து இடதுபக்கம் திரும்பியபோதே வாகனங்கள் தள்ளிவிடப்பட்ட  நிலையில்  தீயில் எரிந்துகொண்டிருந்தன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், போராட்டக்காரர்கள் நடந்து வந்த திசையின் பக்கம் வாகனங்கள் தள்ளிவிடப்பட்டிருந்தன என்பதுதான். எனவே, காவல்துறைதான் வாகனங்களைத் தள்ளிவிட்டுக் கொளுத்தியிருக்கிறது என்பது உறுதியாகிறது. ஆட்சியர் அலுவலகத்துக்குள் முன்னேறிய காவல்துறை, அங்கு வந்த பெண்கள் கூட்டத்தைத் தாக்கினார்கள். தாக்குதல் தொடங்கியபோது அதை தாக்குப்பிடிக்க முடியாமல் பெண்கள் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். சிதறி ஓடும்போது கீழே தவறி விழுந்த பெண்களை கொடூரமான முறையில் தாக்கினார்கள் காவல்துறையினர். துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவு கொடுத்த உடனே, பெண்கள் மீது தோட்டாக்கள் துளைத்துவிடக் கூடாது என்றெண்ணி பக்கத்தில் உள்ள கால்வாயில் நாங்களே தள்ளினோம். அப்போதுதான் ஆண்கள் கூட்டத்தினர் ஆட்சியர் அலுவலக வாசலில் உள்ள கண்ணாடிகளை உடைத்தார்கள். நன்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இவை எல்லாமே வாகனங்கள் தீயிட்ட பின் நடந்த நிகழ்வுகள்.

கால்வாயினுள் புகுந்த காவல்துறையினர் துப்பாக்கியை திருப்பி வைத்து அதன் கட்டைகளால் பெண்களை சரமாரியாகக் குத்தினார்கள். அதில் என்னுடைய மனைவிக்கு வயிற்றில் பலத்தக் காயம் ஏற்பட்டு, மிக அதிக அளவில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. பதற்றத்தில் இருந்த நான் 'என் மனைவிக்கு குண்டடி பட்டுவிட்டது' என்றே நினைத்தேன். 

என் மனைவியையும் இன்னொரு பெண்ணையும் வேறு வழியாக வெளியே கொண்டுவந்து ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அந்த மருத்துவமனைக்குள் புகுந்த காவல்துறை எல்லோரையும் அடித்து விரட்டினார்கள். காயமடைந்தவர்கள் குண்டுகளால் தாக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அரசு ஆம்புலன்ஸ் ஒன்றுகூட வரவில்லை. 108-க்கு அழைத்தபோது, 'அந்த இடங்களுக்கு வர எங்களுக்கு  அனுமதி இல்லை' என்று கூறி ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்தனர். அந்தச் சமயத்தில் எங்களுக்கு முழுக்க முழுக்க உதவியது இஸ்லாமிய சமூகத்தினர்தான். எல்லா பள்ளிவாசலிலும் அவர்களுக்கு ஓர் ஆம்புலன்ஸ் இருக்கும். முஸ்லிம் நண்பர்களே காயமடைந்தவர்களைத் தூக்கி அவர்களுடைய  ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நோன்பு நேரம் என்றுகூடப் பாராமல், ரத்தத்தோடு இருந்தவர்களை எல்லாம் தூக்கிச்சென்றனர் இஸ்லாமிய நண்பர்கள். துப்பாக்கிச் சூடு நடந்த மறுநாள் எந்த மருத்துவரும் மருத்துவமனைக்கு வரவில்லை. ஏனென்றால், மருத்துவமனை முழுக்க முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. 

தூத்துக்குடி போராட்டம்

மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள மாணவர்கள்தான் மருத்துவ உதவி செய்தனர். அதுவும் வெறும் முதலுதவி மட்டும்தான். 24-ம் தேதி வரை முதலுதவிதான் தரப்பட்டது. என் மனைவிக்கு கட்டில் நனையும் அளவுக்கு ரத்தப்போக்கு அதிகரித்தது. உயர் சிகிச்சைக்காக என் மனைவியை வேறு மருத்துவமனைக்கு மாற்ற முற்பட்டபோது, எஸ்.பி., ஆட்சியர் அனுமதி இல்லாமல் யாரையும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற முடியாது என்றார்கள் மருத்துவமனை தரப்பினர். என் மனைவி, அரசு மருத்துவமனையை விட்டு வெளியேறுவதற்கு, மருத்துவமனை முதல்வரும் கையெழுத்திட மறுத்தார். அதன் பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கையெழுத்து பெற்று என் மனைவியைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். முதலில் கருப்பையை அகற்ற வேண்டும் என்று சொன்னார்கள். ஏற்கெனவே இரண்டு அறுவைசிகிச்சை செய்திருப்பதால், மூன்றாவது அறுவை சிகிச்சை செய்ய உடல் தாங்காது என்பதால், மாத்திரை மட்டுமே கொடுத்து அவருக்கு தற்பொழுது ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றுவரை என் மனைவியை அந்த அதிர்ச்சியில் இருந்து மீட்டெடுக்க முடியவில்லை" என்றார்.

தூத்துக்குடியின் ஒவ்வொரு துகளிலும் இதுமாதிரியான ரத்தக் கதறல்கள் ஒளிந்துதான் இருக்கிறது!


டிரெண்டிங் @ விகடன்