வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (05/06/2018)

கடைசி தொடர்பு:11:01 (05/06/2018)

குரூப்பில் ஏற்பட்ட சண்டையால் கொலைசெய்யப்பட்ட வாட்ஸ்அப் அட்மின்!

வாட்ஸ்அப் குரூப்பில் ஏற்பட்ட சண்டையால், அந்த குரூப்பின் அட்மின் கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது. 

வாட்ஸ் அப்

இதுகுறித்துப் பேசிய காவல் துறை அதிகாரிகள், ‘ஹரியானாவின் சோனேபட் பகுதியைச் சேர்ந்த 29 வயதான லவ் ஜோஹர் என்பவர், தன் பகுதியில் உள்ள நண்பர்களைச் சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கியுள்ளார். இந்த குரூப், ‘ஜோஹர்’ என்று பெயரிடப்பட்டே செயல்பட்டுவந்துள்ளது. காலப்போக்கில், அப்பகுதியில் உள்ள கோத்ரா என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்த குரூப்பில் இணைக்கப்பட்டுள்ளனர். கோத்ரா குலத்தவர் அனைவரும் இணைந்து செயல்படுவதற்காகவே இந்த குரூப் உருவாக்கப்பட்டுள்ளது. 

 குரூப் அட்மினான லவ், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது தனிப்பட்ட புகைப்படம் ஒன்றை தன்னை அறியாமல் ஜோஹர் குரூப்பில் பதிவிட்டுள்ளார். அதே குரூப்பில் உள்ள தினேஷ் என்பவருக்கும் லவ்வுக்கும் புகைப்படம் மூலம் வாக்குவாதம் எழத்தொடங்கியுள்ளது. பிறகு, இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கூறி, லவ் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை தனது நண்பரின் வீட்டுக்கு அழைத்துள்ளார் தினேஷ்.

தினேஷின் அழைப்பை ஏற்றுச் சென்ற லவ் மற்றும் அவரது நண்பர்களை தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் தாக்கியுள்ளனர். இந்த இரு குழுவினரும் தெருவில் சண்டை போட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில், லவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் நண்பர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்படப் 6 பேர்மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடைபெற்றுவருகிறது’ எனக் தெரிவித்தனர்.