வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (05/06/2018)

கடைசி தொடர்பு:18:59 (06/06/2018)

`குரல் கொடுப்பீங்களா?’ - ரஜினிகாந்த்துக்கு அன்புமணி வைக்கும் முக்கிய கோரிக்கை

`காலா’ பட டிக்கெட் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்துக்கு பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.

ரஜினிகாந்த்
 


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அந்த படத்துக்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாள்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்துக்கும் ஒவ்வோர் அளவில் உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. சென்னையில் தமிழ்த் திரைப்படங்களுக்கு அதிகபட்சக் கட்டணமாக ரூ.165.78 வசூலிக்கப்படுகிறது. பிற இந்திய மொழிப்படங்களுக்கு ரூ.176.44,  ஆங்கிலப் படங்களுக்கு ரூ.184.06 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதிகாரபூர்வமாகவே ரூ.207.25 வரை நுழைவுச்சீட்டுக் கட்டணம் வசூலித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே இயல்பைவிட அதிகமான கட்டணம் எனப்படும் நிலையில் இதைவிட 10 மடங்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. இந்த அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது என்பதும் புரியவில்லை.

சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உள்ள இரண்டாம் நிலை திரையரங்குகளில் சில நாள்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டது. அந்தத் திரையரங்குகளில் பெரும்பாலான இருக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், வணிக வளாகங்களில் உள்ள முதல் நிலை திரையரங்குகள் உள்ளிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கும் இன்று காலையும் முன்பதிவு தொடங்கின. இவற்றில் முன்பதிவு தொடங்கும்போதே 95% இருக்கைகள் நிரம்பியிருந்தன. அவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள்தான் சட்டவிரோதமாகச் சில முகவர்களுக்கு வழங்கப்பட்டு, கள்ளச் சந்தையில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 5% முன்வரிசை இருக்கைகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்கப்படுகின்றன. இதை வர்ணிக்க பகல்கொள்ளை என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.

நடிகர் ரஜினிகாந்த்தின் திரைப்படங்கள் சமூகத்துக்கு நல்ல கருத்துகளைக் கூறுகின்றனவா, இல்லையா? என்பது ஒருபுறமிருக்க அவரது திரைப்படங்களை, அவை வெளியாகும் நாளிலோ, அதற்கு வாய்ப்பில்லை என்றால் அடுத்த சில நாள்களிலோ கண்டு மகிழ வேண்டும் என்பதே அவர் ரசிகர்களின் லட்சியம் ஆகும். இதற்காக, ரஜினியின் ஏழை ரசிகர்கள்கூட கடன் வாங்கி ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்டத் தயாராக உள்ளனர். ரசிகர்களின் இந்தப் பலவீனம்தான் நடிகர் ரஜினி மற்றும் அவரது படத் தயாரிப்பாளர்களின் பலம் ஆகும். ஆனால், இந்தக் கலாசாரம்தான் சட்ட விரோத கள்ளச்சந்தையை ஊக்குவிப்பதுடன், ஏழை ரஜினி ரசிகர்களைக் கடன்காரர்களாக்குவதற்கும் வகை செய்து வருகிறது.

ஆனால், இப்போது காலம் மாறியிருக்கிறது. சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அரிதாரம் பூசுவதற்கு ஆயத்தமாகிவருகிறார். உரிமைகளுக்காகப் போராடுவது சமூகவிரோதிகளின் செயல் என்று அவர் கூறினாலும்கூட, தமது திரைப்படத்தில் கைதட்டல்களை வாங்குவதற்காக உரிமைகளுக்காக அவர் போராடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்; விதிமீறல்களையும் ஊழல்களையும் ஒழிக்க வேண்டும் என்பதுதான் நடிகர் ரஜினிகாந்த்தின் நோக்கம் என்றால், அதற்கான நடவடிக்கைகளைத் தமது திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதிலிருந்து தொடங்க வேண்டும்.

அதற்காக, தாம் நடித்த காலா திரைப்படத்தை நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணம் கொடுத்து பார்க்கக்கூடாது என்று தன் ரசிகர்களுக்கு நண்பர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை மூலமாகவோ காணொலி பதிவு மூலமாகவோ உடனடியாக அறிவுறுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், அந்தத் திரையரங்குகளில் காலா திரைப்படம் திரையிடப்படுவதைத் தயாரிப்பாளர் மூலம் தடுத்து நிறுத்தவும் நண்பர் ரஜினிகாந்த் முன்வர வேண்டும். அப்போதுதான் நண்பர் ரஜினிகாந்த் அவரது நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க