வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (05/06/2018)

கடைசி தொடர்பு:12:25 (05/06/2018)

சுற்றுச்சூழல் போராளி முகிலன் சிறைச்சாலையில் மீண்டும் உண்ணாவிரதம்!

சுற்றுச்சூழல் போராளியான முகிலன், பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்.

சுற்றுச்சூழல் போராளியான முகிலன், பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி யிருக்கிறார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார்மீது கொலை வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறார். 

முகிலன் உண்ணாவிரதம்

அணுஉலை போராட்டத்தின்போது தொடரப்பட்ட வழக்குகளுக்காகக் கைதுசெய்யப்பட்டு இன்றுடன் 261 நாள்களாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் முகிலன். வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரப்பட்டபோது, இன்று (ஜூன் 5-ம் தேதி) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்தார். அதன்படி, இன்று காலை முதல் அவர் தனது போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். 

உண்ணாவிரதப் போராட்டத்துக்காக 6 கோரிக்கைக்களை அவர் முன்வைத்துள்ளார். அதன்படி, கூடங்குளம் அணுஉலையை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காக ஒரு லட்சம் மக்கள்மீது போடப்பட்ட 132 வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்பேற்று, எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும்.

ஸ்டெர்லைட் படுகொலைக்குக் காரணமான அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன் கீழ், கொலை வழக்குப் பதிவுசெய்து, அனைவரையும் சிறையில் அடைத்து விசாரணை நடத்த வேண்டும். 48,000 ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து அணுக்கதிர்களை வீசி பாதிப்புகளை ஏற்படுத்தும் அணுக்கழிவுகளை கூடங்குளத்திலிருந்து உடனடியாக மக்களுக்கு பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். 

முகிலன்

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு வெளியிட்டிருக்கும் பயன்படாத அரசாணையைத் தூக்கி எறிந்துவிட்டு, மத்திய அரசுடன் இணைந்து சிறப்புச் சட்டம் கொண்டுவந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். காவிரி ஆணையம் என்கிற பெயரில் வெறும் கண்துடைப்புக்காக தமிழகத்தின் உரிமையைப் பாதிக்கும் வகையில் ஆணையம் அமைத்த மத்திய அரசைக் கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.