'நீட்'டில் 460 பேர் மட்டுமே தேர்ச்சி; வெட்கித் தலைகுனியுங்கள்'‍‍- கொந்தளிக்கும் ராமதாஸ்

"அரசுப் பள்ளிகளில் இருந்து தமிழ் மொழியில் தேர்வு எழுதிய 24,720 மாணவ, மாணவியரில், 1.86 விழுக்காட்டினர் மட்டுமே, அதாவது 460 பேர் மட்டுமே தேர்ச்சி  பெற்றுள்ளனர். இதற்கு முழுக் காரணம், தமிழக அரசு தான்" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராமதாஸ்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தேசிய சராசரி தேர்ச்சி விகிதத்தை விட மிகக்குறைந்த தேர்ச்சி விகிதத்தையே தமிழகம் பெற்றிருக்கிறது. நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களைத் தயார்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டதையும்,  நீட் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தோற்க வேண்டும் என்பதில் மத்திய அரசு வென்றிருப்பதையும் இது காட்டுகிறது. தேசிய அளவில் நீட் தேர்வுகளில் பங்கேற்ற 12.70 லட்சம் மாணவ, மாணவியரில் 7.14 லட்சம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இது 56.27% தேர்ச்சியாகும். அதேநேரத்தில், தமிழகத்திலிருந்து இத்தேர்வுகளில் பங்கேற்ற ஒரு லட்சத்து 14,602 மாணவர்களில் 45,336 பேர் மட்டுமே, 39.55 சதவிகிதம் மட்டுமே தேர்ச்சிபெற்றுள்ளனர். இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களில், தமிழகம்தான் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. நாகாலாந்து மாநிலம் மட்டும்தான் தமிழகத்திற்கு கீழ் கடைசி  இடத்தில்  இருக்கிறது.

29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களைக் கொண்ட பட்டியலில் தமிழ்நாடு 34-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, கடைசியிலிருந்து 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்துவரும் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் கல்வித்துறையை சீரழித்திருக்கின்றன. சிந்திக்கும் திறன்கொண்ட கல்வி முறையை ஒழித்துவிட்டு, மனப்பாடக் கல்வியை ஊக்குவித்து, கல்வித் தரத்தைக் குழிதோண்டிப் புதைத்ததுதான் இதற்குக் காரணமாகும். கல்வியில் சிறந்த மாநிலம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் தமிழகம், நீட் தேர்வில் கடைசி இடத்தைப் பிடித்திருப்பது தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமாகும். கடந்த 2017-ம் ஆண்டு, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால், பெரும்பான்மையான மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகவில்லை.  கடைசி நேரத்தில் நீட் தேர்வை கட்டாயம் எழுதியாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்ட நிலையில், எந்த விதமான முன்தயாரிப்பும் இல்லாமல், தமிழக மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 38.83 சதவிகித மாணவர்கள்  தேர்ச்சிபெற்றனர். 

ஆனால், இம்முறை நீட் தேர்வு உறுதி என்ற எண்ணம் ஏற்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் முன்கூட்டியே தேர்வுக்குத் தயாராகி வந்தனர். ஆனாலும், 39.55 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சிபெற்றிருப்பது பெரும் பின்னடைவு ஆகும். இதற்கு, பினாமி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களின் தோல்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டுமா? என்ற வினா எழலாம். அதற்குக் காரணம் உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வுகளில் 31,243 பேர் கூடுதலாக பங்கேற்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். இவர்களால் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சிறப்புப் பயிற்சிபெற முடியாத நிலையில், தமிழக அரசு வழங்கிய இலவச பயிற்சிபெற்று தேர்ச்சி பெறலாம் என்று நம்பினார்கள். ஒட்டுமொத்தமாக, அரசுப் பள்ளி மாணவர்கள் 72 ஆயிரம் பேருக்கு 412 மையங்களில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், அரசுப் பள்ளிகளில் இருந்து தமிழ் மொழியில் தேர்வு எழுதிய 24,720 மாணவ, மாணவியரில்  1.86 விழுக்காட்டினர், அதாவது 460 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஒரு மிகவும் மோசமான சாதனையாகும். இதற்கு முழுக் காரணம் தமிழக அரசுதான்.

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்காக 412 மையங்கள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தாலும், அவற்றில் 312 மையங்கள் தேர்வுக்கு சில வாரங்கள் முன்பாக மட்டுமே தொடங்கப்பட்டன. அவற்றில் மாணவர்களுக்கு 3 நாள்கள் கூட பயிற்சி அளிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அரசு மையங்களில் மாணவர்களுக்கு நேரடியாகப் பயிற்சியளிக்கப்படவில்லை. மாறாக, ஆன்லைனில்தான் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால், நீட் தேர்வுக்கான எந்தப் பயிற்சியும், விழிப்பு உணர்வும் இல்லாமல்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வை எதிர்கொண்டனர். அதனால்தான், தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் குறைந்தது. தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் குறைந்ததில் மத்திய அரசின் பங்களிப்பைப் புறந்தள்ளிவிட முடியாது. தமிழகத்தில் போதிய எண்ணிக்கையில் தேர்வு மையங்களை அமைக்காமல் துரோகம் செய்தது, கேரளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்து ஆயிரக்கணக்கான மாணவர்களை அலைக்கழித்தது, 49 வினாக்களை எழுத்துப்பிழைகளுடன் வழங்கியது, தமிழ் மொழி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாளை வழங்கி பதற்றப்படுத்தியது என தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டே ஏராளமான நெருக்கடிகளைக் கொடுத்தது. இவையும் பாதிப்பை ஏற்படுத்தின.

நீட் தேர்ச்சி விகிதத்தைப் பார்த்தால் ஓர் உண்மை எளிதாக விளங்கும். நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிகம் உள்ள ராஜஸ்தான், டெல்லி ( தலா74%) ஹரியானா, ஆந்திரம் (தலா 73%) சண்டிகர் (72%), தெலுங்கானா (69%) உள்ளிட்ட மாநிலங்கள் அதிக தேர்ச்சி விகிதங்களைப் பெற்றுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை தரமான பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படவில்லை. தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இது தவிர, தமிழகத்தின் பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வு என்பதே பயிற்சி நிறுவனங்கள்மூலம் பெருநிறுவனங்கள் பணம் பறிப்பதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். எனவே, சட்டப்போராட்டத்தின்மூலம் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதுதான் நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். அதுவரை அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் திறமையான ஆசிரியர்களைக்கொண்டு, தரமான பயிற்சி வழங்குவதன்மூலம் நீட் தேர்வில் தமிழகம் முதலிடம் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!